பொது மருத்துவம்

இரவு 10 மணிக்கு முன்பு தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்...

Published On 2024-08-20 09:34 GMT   |   Update On 2024-08-20 09:34 GMT
  • இரவு 10 மணிக்குள் தூங்குவது சர்க்கார்டியன் ரிதத்துக்கும் உகந்தது.
  • பல்வேறு நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கும்.

இரவு சீக்கிரமாக தூங்க செல்வது இதய ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மைகளை அளிக்கும். தாமதமாக தூங்குவதோ, தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுவதோ மனச்சோர்வு, இதய நோய் உள்பட பல்வேறு உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனை பல்வேறு ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளன.

சீக்கிரமாக தூங்க செல்வதன் மூலம் நீண்ட நேரம் நல்ல தூக்கத்தை அனுபவிக்க வழி வகை செய்யும். மறுநாளை சீக்கிரமாக தொடங்குவதற்கும் வழிவகை ஏற்படுத்திக்கொடுக்கும். காலை நேர உடற்பயிற்சிகளை செய்வதற்கான சூழலையும் ஏற்படுத்திக்கொடுக்கும்.

இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் தூங்குவது இதயம் மற்றும் ரத்த ஓட்டம் சார்ந்த நோய் அபாயத்தை குறைக்கும். இந்த நேரத்தை கடந்தும் காலதாமதமாக தூங்கும் வழக்கத்தை பின்பற்றுவது இதய நோய் அபாயத்தை அதிகரிக்க செய்துவிடும் என்பது ஐரோப்பிய இதய இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரவு 10 மணி அல்லது அதற்கு முன்பு தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

ஓய்வெடுக்க அனுமதிக்கும்

இரவு சீக்கிரம் படுக்கைக்கு செல்வது இடையூறு இன்றி உடலை ஓய்வெடுப்பதற்கு வழி வகை செய்யும். ஆழ்ந்த உறக்கத்தை அனுபவிப்பதற்கான சூழலையும் உருவாக்கிக்கொடுக்கும். இரவு 8-9 மணி வரை தூங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்ட இலக்கை எட்டுவதற்கான வாய்ப்பையும் தினம் தினம் ஏற்படுத்திக்கொடுக்கும்.

இதய நோயை தடுக்கும்

உடலில் 24 மணி நேரத்துக்கு ஒருமுறை நிகழும் உயிரியக்க மாற்றமான சர்க்கார்டியன் ரிதம் எனப்படும் சுழற்சி முறை சீர்குலைந்தால் விழிப்பு-தூக்க முறையில் பாதிப்பு உண்டாகும். இது முறையாக நடப்பதற்கு தூக்கம் அவசியமானதாகும். அந்த சுழற்சி அடிப்படையில் நன்றாக தூங்குவது உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட அபாயத்தை குறைக்கும். தூக்கமின்மைக்கும் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு நோய்க்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் நன்றாக தூங்குவது அவசியமானது.

ஹார்மோன்கள் சமநிலை

இரவு 10 மணிக்குள் தூங்குவது சர்க்கார்டியன் ரிதத்துக்கும் உகந்தது. இது மூளையில் உள்ள பினியல் சுரப்பி மற்றும் சுற்றுப்புற சூழலில் இரவு, அதிகாலையில் தென்படும் ஒளியின் அளவுகளுக்கு இடையிலான தொடர்புகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. அதில் மாற்றம் நிகழ்ந்தால் ஹார்மோன்களின் செயல்பாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இரவில் சரியான நேரத்தில் தூங்குவதன் மூலம் ஹார்மோன்களை சீராக நிர்வகிக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி

இரவில் சீக்கிரமாக தூங்க செல்வது உடலுக்கு போதுமான ஓய்வை கொடுப்பதோடு நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்வாய்ப்படும் அபாயத்தை தடுப்பதுடன் தொடர்புடையது. தூக்கம், நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு அத்தியாவசியமானது. போதுமான மணி நேரம் ஆழ்ந்த தூக்கத்தை பெறுவது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் செய்யும். பல்வேறு நோய்களில் இருந்து உடலையும் பாதுகாக்கும். இரவில் நன்கு தூங்குவது உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை எரிக்கவும் உதவும்.

Tags:    

Similar News