கோடையில் அதிகரிக்கும் உடல் வெப்பம்.. வயிற்றை குளிரூட்டும் உணவுகள்...
- உடல் வெப்பநிலை அதிகரிக்கும்போது குடலின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும்.
- வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டும்போது வயிறு தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கும்.
கோடை காலத்தில் வயிறு தொடர்பான பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். உடல் வெப்பநிலை அதிகரிக்கும்போது குடலின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும். மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், குடல் எரிச்சல், சிரோசிஸ் போன்ற இரைப்பை குடல் நோய்களுக்கு வழிவகுக்கும். "வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டும்போது வயிறு தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நோயாளிகளின் எண்ணிக்கை உயரத்தொடங்கும்.
அப்படி வெப்பநிலை உயர்வது நோய் எதிர்ப்பு அமைப்பையும் பலவீனப் படுத்திவிடும். உடலில் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கும். சமைத்த உணவு 4-5 மணி நேரத்திற்கு பிறகு கெட்டுப்போய்விடும். அதனால் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்று பிரச்சினை தவிர்க்கமுடியாததாகிவிடும்" என்கிறார், மருத்துவ நிபுணர் ராம் ஆஷிஷ் யாதவ்.
வெப்பநிலை உயர்வு குடல் நோய்களுக்கு வழி வகுக்கும் என்பதால் இரைப்பையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம்.
சமைத்த உணவுகளை 4 மணி நேரத்திற்குள் உட்கொண்டுவிட வேண்டும். குறிப்பாக மதியம் சமைத்த உணவை இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சமைத்த உணவு மற்றும் தண்ணீர் நிரப்பி இருக்கும் பாத்திரங்களை எப்போதும் மூடி வைக்க வேண்டும்.
நறுக்கிய காய்கறிகள், பழங்களை இரவில் குளிர்சாதன பெட்டியில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
அதிக உடல் உழைப்பு கொண்ட வேலைகளில் ஈடுபட்டிருந்தாலோ அல்லது சூரிய ஒளி உடலில் படும்படியான வேலைகளை மேற்கொண்டிருந்தாலோ குறைந்தது 5 லிட்டர் தண்ணீராவது பருகவேண்டும். மற்றவர்கள் 4 லிட்டர் வரை தண்ணீர் பருகுவது அவசியமானது.
வீட்டை விட்டு வெளியே செல்லும்போது சூரிய ஒளி தலையில் விழாமல் இருப்பதற்கு குடையையோ, தொப்பியையோ பயன்படுத்துவது நல்லது.
தண்ணீரை தவிர கரும்பு சாறு, பதநீர், மோர், பழச்சாறுகள் போன்ற பானங்களை பருகுவது உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும். உணவில் தயிரை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மசாலா மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுவகைகளையும் தவிர்த்துவிடலாம்.
கோடைகாலத்தில் வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க மற்றொரு சிறந்த வழி பருவ காலத்தில் கிடைக்கும் பழங்களை உட்கொள்வதுதான். அவற்றில் உள்ளடங்கி இருக்கும் நீர்ச்சத்து உடலுக்கு குளிர்ச்சி தரும். தர்ப்பூசணி, முலாம் பழம், ஸ்டாபெர்ரி, பிளம்ஸ், பப்பாளி, அன்னாசி, கொய்யா போன்றவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம். ஜூஸாக தயாரித்தும் பருகலாம். சாலட்டுகளாகவும் சாப்பிடலாம்.
இரைப்பை குடல் நோய் தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் சுய மருத்துவத்தை தவிர்க்க வேண்டும். அது நிலைமையை மோசமாக்கும். இரண்டு நாட்களுக்கு மேல் வயிறு தொடர்பான அசவுகரியங்களை எதிர்கொண்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
கோடை காலத்தில் குழந்தைகள் உடல் நலனில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அவர்களை அடிக்கடி வெளியே செல்ல அனுமதிக்காதீர்கள். அவர்கள் உட்கொள்ளும் உணவை கண்காணிப்பதும் அவசியம்.