பொது மருத்துவம்

நீரிழிவு நோயாளிகள் பாகற்காய் சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு குறையுமா?

Published On 2023-06-19 08:27 GMT   |   Update On 2023-06-19 08:27 GMT
  • நீரிழிவு நோய் தற்போது பரவலாக பெரும்பாலான மக்களிடம் காணப்படுகின்றது.
  • நீரிழிவு நோயாளிகள் தங்கள் விருப்பம் போல் அனைத்து உணவுகளையும் சாப்பிட முடியாது.

நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோய் தற்போது பரவலாக பெரும்பாலான மக்களிடம் காணப்படுகின்றது. சிலவகை நீரிழிவு நோயானது குழந்தை பருவத்தில் இருந்தே காணப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் விருப்பம் போல் அனைத்து உணவு வகைகளையும் உண்ணுவதென்பது இயலாத காரியம். நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

பாகற்காயில் வைட்டமின் ஏ, சி, பி2, ஈ, கே, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து ஆகியவை இருக்கின்றன. மேலும், பிளாவினாய்ட்ஸ், பாலிபினால் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்திருக்கின்றது.

பாகற்காயில் கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட், கலோரிகள் போன்றவை குறைந்த அளவே இருப்பதாலும், புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்து இருப்பதாலும், இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கச் செய்யும் வேதிப்பொருட்கள் இருப்பதாலும், சர்க்கரை நோயாளிகள் உணவில் இதை தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். ரத்த சர்க்கரையை குறைக்கும் சரண்டி, விசைன், இன்சுலின் போல செயல்படும் பாலிபெப்டைட் - பி போன்றவை இருப்பதால் இதை சர்க்கரை நோயாளிகள் உட்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பொதுவாக பாகற்காயின் விதைகளால் கசப்பு தன்மை அதிகமாக இருந்தாலும், நாம் விதையையும் சேர்த்து உட்கொள்வது நல்லது. பாகற்காயை அதிகமாக சாப்பிட்டால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தலைவலி போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். கருவுற்றிருக்கும் பெண்கள் பாகற்காயை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அது கருப்பை சுருக்குதலை ஏற்படுத்தி கருக்கலைப்பு கூட நேரலாம். பாகற்காயில் உள்ள கசப்பை போக்குவதற்கு, அதை தயிரில் ஊறவைத்தோ அல்லது வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குடன் சேர்த்து சமைத்தோ சாப்பிடலாம்.

மேலும் பாகற்காயில் உள்ள லெக்டின், திசுக்களில் உள்ள செல்களுக்குள் குளுக்கோஸ் செல்ல உதவி புரிகிறது. மேலும் இது பசியை குறைத்து, உணவை குறைவாக உட்கொள்ள செய்வதால் ரத்தத்தில் சர்க்கரை அளவும் குறைகிறது.

நீரிழிவு நோயாளிகள் தினமும் பாகற்காய் சாற்றை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. ஆனால் பாகற்காய் சாறு குடிப்பது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் என்றாலும் கல்லீரலை பாதிக்கலாம். இது கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தினமும் பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News