பொது மருத்துவம்
null

சர்க்கரை நோயாளிகள் சாக்லெட் சாப்பிடலாமா?

Published On 2024-09-10 07:52 GMT   |   Update On 2024-09-13 02:40 GMT
  • டார்க் சாக்லெட், ஒயிட் சாக்லெட் மற்றும் மில்க் சாக்லெட் என்று மூன்று வகையான சாக்லெட்டுகள் உள்ளன.
  • மன அழுத்தத்தை குறைத்து மூளை செயல்திறனை அதிகரிக்கிறது.

சர்க்கரை நோயாளிகள் சாக்லெட் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சரியான சாக்லெட்டை தேர்வு செய்து சாப்பிட்டால் அது சர்க்கரை அளவை அதிகரிக்காது.

டார்க் சாக்லெட், ஒயிட் சாக்லெட் மற்றும் மில்க் சாக்லெட் என்று மூன்று வகையான சாக்லெட்டுகள் உள்ளன. இவற்றில் டார்க் சாக்லெட்டில் 70-85 சதவிகிதம் கோக்கோ சாலிட்ஸ், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் மிகக்குறைந்த அளவு சர்க்கரை உள்ளது. மில்க் சாக்லெட்டில் 35-55 சதவிகிதம் கொக்கோ சாலிட்ஸ், கொக்கோ வெண்ணெய், பால், சர்க்கரை ஆகியவை உள்ளன.

ஒயிட் சாக்லெட்டில் கொக்கோ சாலிட்ஸ் கிடையாது. இதில் கொக்கோ வெண்ணெய், பால் மற்றும் சர்க்கரை மட்டுமே உள்ளது. இம்மூன்றில் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது கொக்கோ மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ள டார்க் சாக்லெட் ஆகும். இதை சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் மேம்படுவதாக ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள பாலிபெனால்ஸ், பிளாவனால்ஸ், தியோபுரோமின் போன்ற ஆன்டிஆக்சிடென்ட்ஸ், நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியை அதிகரித்து ரத்த நாளங்களை தளர்த்தி, ரத்த அழுத்தத்தை குறைத்து இதயம் திறம்பட செயல்பட துணைபுரிகின்றன.

மேலும் டார்க் சாக்லெட்டில் உள்ள கொக்கோவில் பாஸ்பரஸ், பொட்டாசியம், தாமிரம், இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம் போன்ற தாதுக்களும் உள்ளன. டார்க் சாக்லெட் சாப்பிடுவதால்- ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது, பிரீ ரேடிக்கல்ஸ்களால் ஏற்படும் செல் சேதத்தை தடுக்க உதவுகிறது, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது, செல்களில் ஏற்படும் சேதத்தை தடுத்து முதுமை தோற்றதை தாமதப்படுத்துகிறது, மன அழுத்தத்தை குறைத்து மூளை செயல்திறனை அதிகரிக்கிறது.

சர்க்கரை நோயாளிகள் பயமின்றி டார்க் சாக்லெட் அல்லது பாதாம் சாக்லெட் ஆகியவற்றை ஒரு நாளைக்கு 20 கிராம் வரை சாப்பிடலாம். கேரமல் கலந்த சாக்லெட், ஒயிட் சாக்லெட் மற்றும் பால் சாக்லெட்டுகளை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.

Tags:    

Similar News