பொது மருத்துவம்

சண்டிபுரா வைரஸ்... நோய் அறிகுறிகள்

Published On 2024-07-24 08:40 GMT   |   Update On 2024-07-24 08:40 GMT
  • ஈக்கள், உண்ணிகள், கொசுக்கள் கடிப்பதன் மூலம் மனிதர்கள் அல்லது வீட்டு விலங்குகளுக்கு பரவுகிறது.
  • சண்டிபுரா வைரசுக்கு தடுப்பு சிகிச்சை அல்லது தடுப்பூசி இல்லை.

சமீப காலமாக புதிய புதிய நோய்கள் ஏற்படுகின்றன. அதில், இப்போது பரபரப்பை ஏற்படுத்துவது சண்டிபுரா வைரஸ்.

1965-களில் மகாராஷ்டிரத்தில் சண்டிபுரா நகரில் அடையாளம் காணப்பட்ட இந்த வைரஸ் கிருமிக்கு, அந்த நகரின் பெயரே சூட்டப்பட்டது.

2004-ம் ஆண்டில் மராட்டியம், குஜராத் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இந்த வைரஸ் கிருமியின் தாக்கம் காணப்பட்டது. கிட்டத்தட்ட 300 குழந்தைகள் வரை இந்த கிருமியின் பாதிப்பால் இறந்திருக்கலாம் என்று அப்போது தகவல்கள் தெரிவித்தன. இத்தனை ஆண்டுகள் கழித்து 2024-ல் இந்த வைரஸ் கிருமி மீண்டும் தலைதூக்கி உள்ளது.

குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் சமீபத்தில் 6 குழந்தைகள் சண்டிபுரா வைரசால் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சண்டிபுரா வைரஸ் கிருமி என்பது விலங்குகளில் இருந்து மனிதர்களை தொற்றும் வகையை சேர்ந்தது.

இந்த வைரஸ் கிருமி என்பது ராப்டோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வைரஸ் ஆகும். இது மணல் ஈக்கள் மற்றும் கொசுக்களால் பரவுகிறது. இதில் டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசுவும் அடங்கும்.

 

இந்த பூச்சிகளின் உமிழ்நீர் சுரப்பிகளில் வைரஸ் காணப்படுகிறது. இந்த ஈக்கள், உண்ணிகள், கொசுக்கள் கடிப்பதன் மூலம் மனிதர்கள் அல்லது வீட்டு விலங்குகளுக்கு பரவுகிறது.

சண்டிபுரா வைரஸ் நோய் தொற்றின் அறிகுறிகள் லேசான சுவாசக் கோளாறு முதல் கடுமையான சிக்கல்கள் வரை இருக்கும். காய்ச்சல், தலைவலி, சோர்வு, உடல் மற்றும் தசை வலி, வாந்தி, வலிப்பு, நோய் தொற்று தீவிரமடையும்போது இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற சுவாச அறிகுறிகள் காணப்படும். சில கடுமையான சந்தர்ப்பங்களில், மூளை அழற்சியும் ஏற்படும்.

சண்டிபுரா வைரசுக்கு தடுப்பு சிகிச்சை அல்லது தடுப்பூசி இல்லை. ஆரம்பகால நோயறிதல் மற்றும் சுவாச பாதைகளை நிர்வகித்தல், திரவ சமநிலை மற்றும் 2-ம் நிலை பாக்டீரியா தொற்றுகளை தடுப்பது, மணல் ஈக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை கண்டறிந்து தடுத்தல் போன்றவைதான் தடுப்புமுறைகளாக உள்ளன.

Tags:    

Similar News