பொது மருத்துவம்

ஆப்பிள் பழங்களில் எதற்காக ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது? அதன் அர்த்தம் தெரியுமா?

Published On 2024-09-01 02:54 GMT   |   Update On 2024-09-01 02:54 GMT
  • ஸ்டிக்கர் விலையுடனோ, தரத்துடனோ தொடர்புடையது அல்ல.
  • பழங்களை வாங்கும்போது கவனமுடன் செயல்படுவது நல்லது.

சந்தையில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள் பழங்களில் பெரும்பாலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். அப்படி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆப்பிள் தரமானது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அதனால் அதன் விலை சற்று அதிகமாக இருக்கும் அதில் ஊட்டச்சத்துக்களும் கூடுதலாக இருக்கும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது.

அதனால் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பளபளப்பான ஆப்பிளை தேர்ந்தெடுத்து வாங்குவதற்கும் சிலர் ஆர்வம் காட்டுவார்கள். உண்மையில் அந்த ஸ்டிக்கர் விலையுடனோ, தரத்துடனோ தொடர்புடையது அல்ல. ஆரோக்கியத்துடன்தான் நேரடி தொடர்புடையது.

சில ஆப்பிள் பழங்களின் மீது ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரில் 4 இலக்க எண்கள் இடம் பெற்றிருக்கும். உதாரணமாக 4026, 4987, 4139 என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

அந்த ஆப்பிள்கள் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயனங்களை பயன்படுத்தி விளைவிக்கப்பட்டவை என்பதை விளக்கும் குறியீடுதான் அது.


அந்த ஆப்பிள் பழங்கள் விளையும்போது பூச்சிகள், நோய் தாக்குதலுக்கு உள்ளாகாமல் தடுக்க பூச்சிக்கொல்லிகளை அதிகம் பயன்படுத்தி இருப்பார்கள். அதனால் அந்த ஆப்பிள் பழங்களில் அவற்றின் வீரியம் இருக்கக்கூடும். அதனை நன்கு கழுவி சாப்பிடுவது அவசியமானது.

சில பழங்களின் ஸ்டிக்கரில் 5 இலக்க எண்கள் இருக்கும். அவை 84139, 86532 போன்ற எண் வரிசையை கொண்டிருக்கும். அந்த பழங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை. அதனால் அவற்றை இயற்கையான பழ இனங்களாக கருத முடியாது.

மரபணு மாற்றம் மூலம் ஏராளமான காய்கறி, பழ இனங்கள் உருவாக்கப்படுவதால் அவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும் முடியாது. என்றாலும் இந்த ஆப்பிள் பழங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்து விளைவிக்கப்பட்ட மற்ற பழங்களை விட சற்று விலை அதிகமாக இருக்கும்.


9 என்ற எண்ணில் தொடங்கும் 5 இலக்க எண்களுடன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆப்பிள்களும் இருக்கின்றன. அதாவது, 94750.

இந்த பழங்கள் இயற்கை முறையில் விளைந்தவை. அதாவது இந்த பழங்களின் விளைச்சலுக்கு பூச்சிக்கொல்லிகளோ, ரசாயன உரங்களோ பயன்படுத்தப்படவில்லை என்று அர்த்தம். அதனால் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும்.


ஆப்பிள் பழங்கள் மட்டுமல்ல ஆரஞ்சு போன்ற பழங்களிலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. சிலர் போலி ஸ்டிக்கர்களை தயாரித்து பழங்களின் மீது ஒட்டுவதும் நடக்கிறது.

அந்த பழங்கள் உயர்ந்த தரம் கொண்டவை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகின்றன என்பது போன்ற மாய தோற்றத்தை உருவாக்கவும் செய்வார்கள்.

எனவே ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பழங்களை வாங்கும்போது கவனமுடன் செயல்படுவது நல்லது.

Tags:    

Similar News