புகைப்பிடிக்கும் பழக்கத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
- சிகரெட் புகைத்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள்.
- இதய செயலிழப்பு போன்ற பாதிப்புகளுக்கும் வித்திடும்.
சிகரெட் போன்ற புகையிலைப்பொருட்களின் புகையை உள்ளிழுத்த பிறகு, இதய அமைப்பு உடனடியாக சில மாற்றங்களுக்கு உட்படுகிறது. இதய துடிப்பில் வேறுபாடு, ரத்த அழுத்தம் சீரற்றத்தன்மை, தமனி சுருக்கம் என இதய செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிகரெட் புகைத்த பிறகு உடலில் ஏற்படும் அத்தகைய மாற்றங்கள் குறித்து பார்ப்போம்.
இதயத் துடிப்பு
புகையிலையில் இருக்கும் முதன்மையான போதைப்பொருளான நிகோடின், இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும் ஹார்மோனான அட்ரினலின் செயல்பாட்டை தூண்டுவிடும். அதனால் புகைபிடித்த சில நொடிகளுக்குள் இதயத்துடிப்பு உடனடியாக அதிகரிக்க தொடங்கிவிடும்.
ரத்த அழுத்தம்
நிகோடின் ரத்த நாளங்களை சுருங்கச் செய்யக்கூடியது. ரத்த அழுத்தத்தை அதிகரிக்கவும் செய்யும். இதனால் இதயத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதய நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கும்.
ஆக்சிஜன் குறையும்
சிகரெட் போன்ற புகையிலைப்பொருட்களின் புகையில் கார்பன் மோனாக்சைடு உள்ளது. இது ரத்த ஓட்டத்தில் குறுக்கிட்டு அதில் கடத்தப்படும் ஆக்சிஜன் அளவை குறைக்கும். இதய தசை உள்பட செல்களுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் அளவை குறைப்பதற்கும் வழிவகுத்துவிடும்.
ரத்த உறைவு
புகைபிடிக்கும் பழக்கத்தை தொடரும்போது தமனிகளில் அடைப்பு உருவாவதை ஊக்குவிக்கும். இதனால் ரத்த உறைவு பிரச்சினை ஏற்படும். இதயம் அல்லது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும். அதன் காரணமாக மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படக்கூடும்.
இதய செயலிழப்பு
புகைப்பழக்கத்தை இடைவிடாமல் தொடர்ந்தால் இதயத்திற்கு செல்லும் ரத்தத்தின் தேவையை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யலாம். ரத்த விநியோகத்தை ஒட்டுமொத்தமாக நிறுத்துவதற்கும் வழிவகுக்கலாம். இந்த ஏற்றத்தாழ்வுகள் மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்ற பாதிப்புகளுக்கும் வித்திடும்.