அம்மை, வியர்க்குரு... வெயில் கால நோய்களுக்கு சித்த மருத்துவம் தரும் தீர்வு
- கோடை வெயில் தற்பொழுதே வாட்டி வதைக்க தொடங்கியிருக்கிறது.
- படுக்கை விரிப்புகள் காட்டன் வகை துணியாக இருப்பது நல்லது.
பருவநிலை மாற்றங்களால் இயற்கை மாறுவது வழக்கமே. இதுபோன்ற பருவகால மாற்றங்கள் பல்வேறு வகையான நோய்களையும், குறிப்பாக தொற்று நோய்களையும் ஏற்படுத்துகிறது. கோடை வெயில் தற்பொழுதே வாட்டி வதைக்க தொடங்கியிருக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளாக கொடிய கொரோனா தொற்று நோயை எண்ணி பயப்படாதவர்களே இல்லை. அந்த அளவிற்கு நோயின் தொற்றும், பாதிப்பும் அதிகமாக இருந்தது. அது இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதற்குள் இன்னொரு தொற்று நோய் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது ஒருபக்கம், கோடை கால தொற்று நோய்கள் மறுபக்கம் என நோய்களின் ஆதிக்கம் எல்லா காலத்திலும் இருக்கத்தான் செய்கிறது.
வெயில் காலம் என்று சொல்லக் கூடிய கோடை காலத்தில் அம்மைநோய், குடற்புண்கள், மூலம், பவுத்திரம், சிறுநீரக தொற்று, வியர்க்குரு, மஞ்சள் காமாலை, தூக்கமின்மை, மலக்கட்டு போன்றவை அதிகமாக காணப்படும். தொற்று நோய்கள் என்பவை உணவு, குடிநீர், காற்று மற்றும் தொடுதல் மூலமாக வைரஸ் கிருமிகள் ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்கு பரவி குறி குணங்களை ஏற்படுத்தும்.
சித்த மருத்துவத்தில் பலவித தொற்று நோய்கள் பற்றிய குறிப்புகளும், அந்நோய்களுக்கு மருத்துவ தீர்வுகளும், நோய்கள் ஏற்படாமல் இருக்க தற்காப்பு முறைகளையும் விரிவாக கூறப்பட்டுள்ளன. கோடை காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களில் முதன்மையாக விளங்குவது அம்மை நோயாகும்.
அம்மை நோய் நோய் வரும் வழி
நோயாளியின் அம்மைக் கொப்புளங்களிலும், சளியிலும் இந்த நோய்க் கிருமிகள் இருக்கும். நோயாளி இருமும் போதும், தும்மும்போதும் காற்றில் பரவுவதாலும், அவர்களின் உடைமைளை கையாள்வதன் மூலமும் இந்த நோய் அடுத்தவர்களுக்குப் பரவும். இதனால்தான் அம்மை நோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த நடைமுறை பல ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்படுகிறது.
அம்மை நோயில் பெரியம்மை, சிறியம்மை, பூட்டுத்தாளம்மை, தட்டம்மை என பல வகைகள் உண்டு. வெரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரசால் சின்னம்மை நோயும், பாராமிக்ஸோ குடும்பத்தை சேர்ந்த ஆர்.என்.ஏ. வைரசால் பூட்டுத்தாளம்மையும், ரூபியோலா வைரசால் தட்டம்மையும் ஏற்படுகிறது.
பொதுவாக அனைத்து வகை அம்மை நோய்களிலும் ஜூரம், உடல்வலி, தலைவலி, உடல் சோர்வு, உடலில் அரிப்பு, நமைச்சல், எரிச்சல், பின் உடலில் ஆங்காங்கு சிறு கொப்புளங்கள் ஏற்படும். ஏழாம் நாளில் ஜூரம் முழுவதும் நீங்கி கொப்புளங்கள் சுருங்கி, பின் பொருக்குகள் உதிரும். அம்மைத் தழும்புகள் சில மாதங்களில் சிறிது சிறிதாக மறைந்துவிடும். இருப்பினும் அம்மைநோய் குழந்தைகளைத் தீவிரமாகத் தாக்கினால், நிமோனியா, மூளைக்காய்ச்சல், இதயத்தசை அழற்சி, சிறுநீரக அழற்சி போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். கர்ப்பிணிகளுக்குச் சின்னம்மை வருமானால், கருவில் வளரும் சிசுவை பாதித்து பிறவி ஊனத்தையும் இது உண்டாக்கலாம்
அம்மை நோயை பொறுத்த வரையில் அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம் என்ற சித்தர்கள் வாக்கிற்கிணங்க சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு நமது உடல் தட்பவெட்ப மாறுதலடையும். கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் மனித உடலில் வெப்பம் அதிகரித்து, பித்தம் அதிகரிக்கும். இந்நிலையில் மழை பெய்யும் போது கபகுற்றம் சேர்ந்து, உடலில் எதிர்ப்பு சக்தி குறைவதால், வைரஸ் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டு இந்நோய் உண்டாகிறது. அதனால் இந்நோயில் அதிகரித்த பித்தத்தையும், கபத்தையும் சரி செய்ய வேண்டும். இப்படி முக்குற்றத்தை சமப்படுத்தி தகுந்த உணவு, தகுந்த சித்த மருந்துகளை நம் முன்னோர்கள் கொடுத்து கட்டுப்படுத்தி தீவிர நிலை பாதிப்பை குறைத்து குணம் கண்டு நமக்கு விட்டுச் சென்றுள்ளனர்.
அவைகளில் முத்துப்பற்பம், பவள பற்பம், சிருங்கி பற்பம் மற்றும் ஜூரத்தை குறைக்க சாந்த சந்திரோதய மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, பிரம்மானந்த பைரவ மாத்திரை, தாளிசாதி சூரணம், சந்தநாதி மாத்திரை, கோரைக்கிழங்கு சூரணம் போன்றவைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கிருமிகளை அழிக்க சொடக்கு தக்காளி அல்லது மிளகு தக்காளி என்ற மூலிகையின் கற்கம் நெல்லிக்காய் அளவு (5 கிராம்) உள்ளுக்குள் நான்கு முதல் ஐந்து நாட்கள் வழங்க நோய் கிருமியின் தாக்கம் குறையும். நோய் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாமலிருக்க வேப்பிலை, துளசி, மஞ்சள், பூங்கற்பூரம் நான்கையும் சேர்த்து கரைத்த நீரினால் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பவர் அறைக்கு யாரேனும் ஒருவர் உடல் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அதாவது உடல் ஆரோக்கியமாக இருப்பவர் மட்டுமே செல்வது, உணவு வழங்குவது, குளிப்பாட்டுவது என இருக்கவேண்டும். மற்றவர்கள் இடைவெளி கடைபிடிப்பது தொற்று பரவாமல் தடுக்க உதவும். முகக்கவசம், கையுறை பயன்படுத்திக் கொள்ளலாம்.
படுக்கை விரிப்புகள் காட்டன் வகை துணியாக இருப்பது நல்லது. மேலும் வைரஸ் தடுப்பு மூலிகைகள், வேப்பிலை, துளசி இலைகளை படுக்கை தலைமாட்டில் மற்றும் வீட்டின் வாசலில் சொறுகி வைக்கலாம். மேலும் படுக்கை விரிப்புகள் மஞ்சள் கலந்த நீரில் முக்கி நிழலில் உலர்த்தி தினசரி தலையனை உள்பட மாற்றவேண்டும்.
நீர்ச்சத்து குறையாமல் இருக்க பழச்சாறு, இளநீர், நீர், மோர் கொடுக்கலாம். மலக்கட்டு இல்லாமல் இருக்க திரிபலா சூரணம், மாத்திரை அல்லது கடுக்காய் சூரணம் மருத்துவர் ஆலோசனை பெற்று கொடுக்கலாம். மேலும் வேப்பிலை, துளசி, மஞ்சள், சந்தனம் நான்கையும் வேண்டிய அளவு எடுத்து சேர்த்து அரைத்து மேற்பூச்சாக பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் தீவிரம் குறைந்து விரைவில் குணமடையும், தழும்பு ஏற்படாது.
வெயிலின் தாக்கத்தை குறைக்கவும் அம்மை நோய்கள் பரவாமல் தடுக்கவும் சித்த மருத்துவம் கூறும் அறிவுரைகள்:
உணவில் அதிக அளவு தயிர், மோர், கீரை, காய்கறிகள், மலை வாழைப்பழம் தர்பூசணி, இளநீர், கரும்புச்சாறு, பழைய நீராகாரம், வெள்ளரிப்பழம், முலாம்பழம், கருப்பு திராட்சை, மாதுளை, ஆரஞ்சு, எலுமிச்சை ஆகிய பழங்கள் உட்கொள்ள வேண்டும். ஆவியில் வேக வைத்த உணவுகள் மிகவும் நல்லது. நீராகாரம், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் போன்றவற்றை தயிர், மோர் சேர்த்து அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இளநீர், நுங்கு, வெட்டிவேர் மற்றும் நன்னாரி ஊறவைத்த குடிநீர், நெல்லிக்காய் ஊறல் குடிநீர் ஆகியவற்றை அருந்த வேண்டும். அதிக காரம், புளிப்பு, மசாலா அடங்கிய உணவுகள், கேக், பிஸ்கட், பரோட்டா போன்ற மைதா மாவினால் செய்த உணவு தின்பண்டங்கள், துரித உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும், சூடாக எதையும் கொடுக்க கூடாது. காட்டன் வகை ஆடைகள் அணியவேண்டும். இருக்கமாக ஆடை அணியக்கூடாது, உள்ளாடைகளை தவிர்ப்பது நல்லது. இதனால் அம்மை புண்கள் அழுத்தி வேதனையை உண்டாக்கும்.
குளிர்ந்த நீரில் சிறிது வேப்பிலை, துளசி மற்றும் மஞ்சளை கலந்து ஊற வைத்து குளிப்பதால் அம்மை நோயின் தாக்கம் குறையும். பருத்தியினால் செய்யப்பட்ட உடைகளை அணிய வேண்டும். வேப்பிலை விரிப்புகள் வைரஸ் வீரியத்தை நிச்சயமாக குறைக்கும்.
மற்றபடி நோய் வராமலிருக்க மலக்கட்டு கூடாது, இரவில் கண் விழித்தலை தவிர்க்க வேண்டும், சரியான நேரத்தில் சரியான அளவில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும், நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும். குறைந்தது 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இயற்கை உபாதைகளை அடக்க கூடாது. நல்லெண்ணெய் குளியல் வாரம் இருமுறை மேற்கொள்ளவேண்டும்.
வீட்டில் வெட்டிவேர், தர்ப்பைப்புல், கோரைப்புல் பாய்களை விரிப்புகளாக பயன்படுத்தலாம், எப்பொழுதும் நல்லது. ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். காட்டன் துணியை உடுத்த வேண்டும். இரவில் தளர்ந்த ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். இருக்கும் அறை, தூங்கும் அறைகள் காற்றோட்டம் உள்ளதாக இருக்க வேண்டும். அதிக காரம், அதிக புளிப்பு சுவையை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர் பானங்கள், ஐஸ் வாட்டர் குடிக்க வேண்டாம். மண்பானையில் தண்ணீர் வைத்து குடிக்கவும். துரித உணவு, பதப்படுத்தி பாக்கெட் மற்றும் டின்களில் அடைத்து வைத்து விற்கப்படும் அனைத்தையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
அடிக்கடி டீ குடிப்பதை தவிர்த்து பழச்சாறு பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள். மது, புகையை குறைக்கலாம் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம். போதிய அளவில் உறக்கம், ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்திற்கும் மேலாக மனது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
மேற்கண்ட வாறு சித்த மருத்துவத்தில் கூறும் வழிமுறைகளை பின்பற்றி வந்தால் கோடை காலத்தில் வரும் அம்மை நோய் மற்ற தொற்றுகளிலிருந்து (அதாவது மஞ்சள் காமாலை, சிறுநீரக தொற்று, மூலம், பவுத்திரம், மலக்கட்டு, பலவித வைரஸ் தொற்று காய்ச்சல் போன்றவை) நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம், பிறருக்கும் பரவாமல் தடுக்கலாம்.
மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளார்.