சிறுநீரக பாதிப்பும், சிகிச்சை முறைகளும்
- ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- தற்போது இரண்டு வகையான டயாலிசிஸ் சிகிச்சைகள் உள்ளன.
நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு (Chronic Kidney Disease) என்பது உலக அளவில் ஒரு பெரும் பிரச்சினையாக உருவாகி வருகிறது. ஒரு ஆய்வு அறிக்கையில் இந்த நோய் இறப்புக்கான காரணங்களின் பட்டியலில் 13வது இடத்தில் இருந்தது. மேலும் 2040ம் ஆண்டில் இது உலக அளவில் இறப்புக்கான காரணங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உயர்இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், புகைபிடித்தல் மற்றும் உடல் பருமன் ஆகியவை சிறுநீரக நோய்க்கு வழிவகுக்கும். ஒரு கட்டுப்பாடற்ற நீரழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளி ஒரு இறுதி நிலை சிறுநீரக நோயாளியாக (End Stage renal disease) எளிதாகவும், விரைவாகவும் முன்னேறலாம். இந்நோயின் ஆரம்ப கட்டங்களில் அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை.
இருதய நோயாளிகள் , நீரழிவு நோயாளிகள், இரத்த கொதிப்பு நோயாளிகள், குடும்பத்தில் மற்றவர்களுக்கு சிறுநீரக கோளாறு இருப்பவர்கள், அதிக உடல் பருமன் உள்ளவர்கள் அவ்வப்போது சிறுநீரக பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
எடை இழப்பு, பசியின்மை, கை-கால் வீக்கம், மூச்சு திணறல், உடல் சோர்வு, சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல், இரவில் அதிகமாக சிறுநீர் கழித்தல், தூக்கம் இன்மை, தோல் அரிப்பு, தலைவலி போன்ற அறிகுறிகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக ஏற்படலாம்.
நோயின் ஆரம்ப நிலைகளில் சரியான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் மருந்துகள் உட்கொள்வதன் மூலம் நோய் முற்றிய நிலையை அடைவதை தடுக்க முடியும். சிறுநீரக செயலிழப்பு காரணமாக உடலில் நீர் மற்றும் நச்சுப் பொருள்கள் அதிக அளவில் ரத்தத்தில் கலந்து இருந்தால் அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படும். நவீன டயாலிஸிஸ் சிகிச்சை மூலம் இந்நோயாளிகளின் சராசரி வாழ்நாள் சற்று உயர்ந்துள்ளது.
தற்போது இரண்டு வகையான டயாலிசிஸ் சிகிச்சைகள் உள்ளன. ஒன்று ஹீமோ டயாலிசிஸ் , மற்றொன்று பெரிட்டோனியல் டயாலிஸிஸ். ஹீமோ டயாலிசிஸ் என்பது உடம்பில் உள்ள ரத்தத்தை ரத்தக்குழாய் (AV Fistula) மூலம் வெளியே எடுத்து ஹீமோ டயாலிசிஸ் இயந்திரத்தினுள் செலுத்தி சுத்திகரிப்பு செய்து மறுபடியும் உடம்பினுள் செலுத்துவதாகும். இது ஒவ்வொரு நோயாளிக்கு ஏற்றவாறு வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தேவைப்படும் சிகிச்சைக்கு. இச்சிகிச்சைக்கு ஒவ்வொரு முறையும் நோயாளி மருத்துவ நிலையத் திற்கு செல்ல வேண்டியது இருக்கும்.
பெரிடோனியல் டயாலிசிஸ் சிகிச்சை வீட்டிலிருந்து தினமும் செய்யக்கூடிய சிகிச்சை முறை ஆகும். இதற்காக நோயாளி ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை.
சிறுநீரக செயலிழப்பிற்கு சிறந்த சிகிச்சையாக தற்போது இருப்பது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (Renal Transplantation) ஆகும்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்பட்டவர்கள் சாதாரண மனிதர்களைப் போல இயல்பான வாழ்க்கை வாழமுடியும். எனினும் மாற்றுச் சிறுநீரகம் கிடைப்பது தற்போது அரிதாகி வருகிறது. எனவே சிறுநீரக செயலிழப்பு நோயின் நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் நிரந்தர சிறுநீரக செயலிழப்பை தடுக்க முடியும்.
கமலா ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, கோவில்பட்டி
Dr.R. கிருஷ்ணன்M.D., DM (Nephro)