பொது மருத்துவம்

கொரோனா வைரஸ் திரிபுகளின் ஆயுட்காலம்...

Published On 2022-06-21 07:39 GMT   |   Update On 2022-06-21 07:39 GMT
  • ஒமைக்ரான் அதிகம் பரவும் தன்மையை கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • ஒமைக்ரான் தோலில் 21 மணி நேரமும், பிளாஸ்டிக் மேற்பரப்பில் 8 நாட்களுக்கு மேலும் உயிர் வாழ்கிறது.

கொரோனா வைரஸ் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுபட்ட திரிபுகளுடன் பரவி உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. தற்போது கொரோனா மூன்றாவது அலை ஒமைக்ரான் ரூபத்தில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது.

இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது, லேசான அறிகுறிகளை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டாலும், பல இடங்களில் வேகமாக பரவுகிறது. இதற்கான காரணத்தை கண்டறிய உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஜப்பானில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஒமைக்ரான் அதிகம் பரவும் தன்மையை கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது சருமத்தில் 21 மணி நேரமும், பிளாஸ்டிக் பொருட்களின் மேற்பரப்பில் 8 நாட்களுக்கு மேலும் தங்கி இருக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் மற்ற திரிபுகளை விட இது நீண்ட காலம் தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் உள்ள கியோட்டோ பிரிபெக்சுரல் யூனிவர்சிட்டி ஆப் மெடிசின் நிறுவன விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்கள். சீனாவின் ஊஹானில் தோன்றிய அசல் கொரோனா வைரசின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் அதன் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட வைரசின் பிற வகைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை பகுப்பாய்வு செய்வதை இந்த ஆய்வு நோக்கமாக கொண்டுள்ளது.

கொரோனா வைரசின் திரிபுகளான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகைகளை வுஹானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசுடன் ஒப்பிட்டு பார்த்து ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த வைரஸ் திரிபுகளை வுஹானில் கண்டறியப்பட்ட கொரோனா மாறுபாட்டுடன் ஒப்பிடும்போது அவை தோல் உள்ளிட்ட சருமம் மற்றும் பிளாஸ்டிக்கில் இரண்டு மடங்கு அதிக காலம் உயிர்வாழ்கின்றன. குறிப்பாக ஒமைக்ரான் தோலில் 21 மணி நேரமும், பிளாஸ்டிக் மேற்பரப்பில் 8 நாட்களுக்கு மேலும் உயிர் வாழ்கிறது.

அதனுடன் ஒப்பிடும்போது, வுஹானின்​ அசல் திரிபு தோலில் 8.6 மணிநேரமும், பிளாஸ்டிக் பொருட்களில் 56 மணிநேரமும் மட்டுமே தங்கி இருக்கும் தன்மை கொண்டது.

இங்கிலாந்தில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆல்பா மாறுபாடு, தோலின் மேற்பரப்பில் 19.6 மணி நேரமும், பிளாஸ்டிக்கில் 191.3 மணி நேரமும் நிலைத் திருக்கும். இதேபோல், தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பீட்டா மாறுபாடு, தோலில் 11 மணி நேரமும், பிளாஸ்டிக் பொருட்களில் 156.6 மணி நேரமும் தங்கி இருக்கும்.

பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்ட காமா மாறுபாடு, தோலில் 11 மணி நேரமும், பிளாஸ்டிக்கில் 59.3 மணி நேரமும் உயிர்வாழும்.

இந்தியாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டு, நாட்டையே உலுக்கி, அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி, இரண்டாவது அலையை இயக்கிய டெல்டா வைரஸ் தோலில் 16.8 மணி நேரமும், பிளாஸ்டிக் பொருட்களின் மேற்பரப்பில் 114 மணிநேரமும் உயிர் வாழும் என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த வைரஸ் திரிபுகளில் ஒமைக்ரான் சுற்றுச்சூழல் ஸ்திரத்தன்மையை கொண்டுள்ளது. அதன் வேகமான பரவல் பிற திரிபுகளின் தன்மையை மாற்றும் திறனை கொண்டுள்ளது. ஆல்பா மற்றும் பீட்டா வகைகள் உயிர் வாழும் நேரங்களில் பெரிய அளவில் மாறுபாடு இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவென்றால், அனைத்து வைரஸ் திரிபுகளும் 35 சதவீதம் ஆல்ஹகால் உள்ளடக்கிய பொருட்களில் 15 வினாடிகளுக்குள் செயலிழந்து போய்விடும். இது கைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும், சானிடைசர் பயன்பாட்டின் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது.

Tags:    

Similar News