கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் அதிகம் உபயோகிப்பதால் கண்களில் பிரஷர் வருமா...?
- கண்களில் வரும் பிரஷர் ஒன்று இருப்பதை அறிவீர்களா?
- பார்வை நரம்புகளில் ஏற்படும் பாதிப்பே க்ளாக்கோமா.
ரத்த அழுத்தத்தைக் குறிக்கும் பிளட் பிரஷர் உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதே மாதிரி கண்களில் வரும் பிரஷர் ஒன்று இருப்பதை அறிவீர்களா? அதன் பெயர் `க்ளாக்கோமா' கண்களில் உள்ள பார்வை நரம்புகளில் ஏற்படும் பாதிப்பே க்ளாக்கோமா. கண்ணின் முன்பகுதிக்குள் ஆக்குவஸ் ஹியூமர் என்ற திரவம் சுற்றி வரும். இது அளவுக்கதிகமாக உற்பத்தியானாலோ, வெளியேறாமல் இருந்தாலோ கண்களில் அழுத்தம் அதிகரிக்கும். இதனால் பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டு க்ளாக்கோமா பிரச்னை ஏற்படும்.
கண்களில் ஏற்படும் இந்த அழுத்தம் எந்த வயதினருக்கும் வரலாம். பிறந்த குழந்தைக்கு வரும் கண் அழுத்தத்தை கொங்கனிடல் Glaucoma என்கிறோம். இதனால் பாதிக்கப்படும் குழந்தைக்கு முதலில் கண்கள் அழகாக இருக்கும். பிறகு, கண்கள் பெரிதாகிக்கொண்டேபோய், ஒரு கட்டத்தில் ரொம்பவும் பெரிதாகிவிடும். கருவிழிகள் நீலநிறமாகி, பிறகு வெள்ளையாக மாறிவிடும். கண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கும்.
கண்களில் பிரஷர் வருவதற்கு கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் காரணமல்ல. இந்நோயை கண் நீர் அழுத்த நோய் (குளுக்கோமா) என்று கூறுவார்கள். ரத்த அழுத்தம் இருப்பதால் கண் நீர் அழுத்த நோய் வராது.
கண் நீர் அழுத்த நோய் வருவதற்கான காரணங்கள்:
பரம்பரை, உயர் கிட்டப்பார்வை, கண்ணில் அடிபடுதல், நீரிழிவு நோய், ஸ்டிராய்டு மருந்து அதிகம் உபயோகித்தல் மற்றும் கண்ணீர் போகும் பாதை குறுகி இருத்தல் ஆகிய காரணங்களால் கண் நீர் அழுத்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கண்ணீர் போகும் பாதை குறுகி இருப்பவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் கண் நீர் அழுத்த நோய் வராமல் தடுக்கலாம்.