முதுமையில் மூளை செயல்திறன் குறைவால் வரும் பாதிப்புகள்
- மனிதனுக்கு வயதான பின்புதான் அல்சைமர், மனநல இழப்பு நோய் ஆகியவை தாக்குகின்றன.
- மனிதன் 40 வயதை கடந்துவிட்டாலே மூளையின் எடை குறைய தொடங்கும்.
இந்தியாவிற்கு இளமையான நாடு என்றொரு பெயர்இருக்கிறது. அதே நேரத்தில் முதியோர்களின் எண்ணிக்கை சதவீதமும் அதிகரித்து வருகிறது.
முதுமைக்கு அரசு ஓர் அளவுகோல் வைத்திருக்கிறது. ஆண்களுக்கு 65 வயது, பெண்களுக்கு 60 வயது. ஆனால் உளவியல் கணக்குப்படி ஒருவருக்கு முதுமை என்பது 50 வயதிலேயே தொடங்கி விடுகிறது.
இப்போது போகும் வேகத்தில் போனால் 2060-ல் இந்திய மக்களில் 34 கோடி பேர் முதியவர்களாக இருப்பார்கள்.
பொதுவாகவே மனிதன் 40 வயதை கடந்துவிட்டாலே மூளையின் எடை குறைய தொடங்கும் என்கிறது, மருத்துவ உலகம்.
சராசரியாக 1394 கிராம் எடை கொண்ட மூளை, அதன்பின் 1161 கிராமாக குறைந்துவிடுகிறது. அதோடு மூளைக்கு போகும் ரத்த ஓட்டமும் நாளடைவில் கொஞ்சம், கொஞ்சமாக குறைய தொடங்குகிறது. மூளையில் ஏற்படும் இந்த மாற்றம் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது.
நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கண், காது, சுவை உணர்வு, வாசனை உணர்வு, தசைகளின் இயக்கம், உணர்திறன் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறைகிறது. நரம்பணு இழப்பும், இணைப்பு திசுக்களில் ஏற்படும் மாற்றம்தான் இந்த எடை குறைவுக்கு காரணம் என்கிறார்கள், மருத்துவர்கள்.
மேலும் மூளையில் உள்ள ஹிப்போகாம்பஸ் மற்றும் சிங்குலேட் மேடு என்ற பகுதிதான் மனதை கட்டுப்படுத்துகிறது. முதுமை வந்தபின் இவை தங்கள் சக்தியை இழந்து விடுகின்றன. இதனால் முதுகெலும்பும் பாதிக்கப்படுகிறது. உணர்வு முடிச்சுகள், உள் மூளை நரம்பு அணுக்கள், சிறு மூளை அணுக்கள் ஆகியவை சுமார் 25 சதவீதம் வரை குறைந்துவிடுகிறது.
ஒரு மனிதனுக்கு வயதான பின்புதான் அல்சைமர், மனநல இழப்பு நோய் ஆகியவை தாக்குகின்றன. இவை ஒரு மனிதனின் சுய நினைவாற்றல், மானம், வெட்கம் ஆகிய உணர்வுகளை மழுங்க செய்துவிடுகிறது. இதன் தாக்கம் உள்ளவர்கள் நெருப்பு, மின்சாரம், கத்தி போன்றவற்றின் ஆபத்தை உணராமல் கூட செயல்படுவார்கள். காலை, மாலை நேரம் போன்ற எதையும் புரிந்துகொள்ள முடியாது. உடையில் சிறுநீர் கழிப்பார்கள். குளித்துவிட்டு ஆடை அணியாமல் வெளியே வருவார்கள். எனவே இதுபோன்ற நிலையில் உள்ள முதியோர்களை பாதுகாக்க அரசுமருத்துவமனைகளில் முதியவர்களுக்கென்று தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.