பொது மருத்துவம்

தனிமையில் வாழும் முதியோர்களின் ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் என்ன?

Published On 2023-03-15 08:09 GMT   |   Update On 2023-03-15 08:09 GMT
  • கொரோனா காலங்களில் தனியாக வசித்த முதியோர் உணவு கூட சரியாக கிடைக்காமல் சிரமப்பட்டனர்.
  • இந்தியாவில் 80 சதவீதம் பேர் முதுமையில் கஷ்டத்தையே சந்திக்கின்றனர்.

இளமை காலத்தில் இனிக்கிற வாழ்க்கை பலருக்கு முதுமையில் கசப்பாகி விடுகிறது. அதுவும் தனிமையில் வாழும் போது தவிப்பாகி விடுகிறது. ஏனெனில் பரபரப்பான உலகில் பாச உணர்வுகள் உள்ளங்களில் இருந்தாலும் பிள்ளைகள் இல்லங்களில் சேர்ந்து வாழ்வதற்கான சூழல் இல்லை என்கிற நிலை.

தனிமையில் தள்ளாடும்...

இதனால் சிலர் தங்களது பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவது என்பதும் காலத்தின் கட்டாயம் என்கின்றனர். ஆனால் வயதான பெற்றோர் பலர் முதியோர் இல்லத்துக்குள் செல்லாமல் தங்களது இல்லத்திலேயே தனிமையில் தள்ளாடும் வயது வரை காலத்தை தள்ளி விடுகின்றனர். எப்போதாவது வந்து செல்லும் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் நினைவுகளை தாங்கியபடி அவர்களின் பயணம் தொடர்கிறது.

உதாரணமாக மாநகராட்சி அந்தஸ்தை பெற்ற கடலூரில் திரும்பிய பக்கமெல்லாம், பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர் சுற்றித்திரிவதே சான்று. மேலும் வீடுகளில் தனிமையில் வாழ முடியாமல் தவிக்கும் பெரும்பாலான முதியோர் நகரில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களிலும் தங்கியுள்ளனர்.

ஆரம்பத்தில் பிள்ளைகளுடன் இருக்கும் இவர்கள், வேலை விஷயமாக பிள்ளைகள் வீட்டை விட்டு செல்லும் போது முதுமை தம்பதிகள் தனிமையிலே வாழ்கின்றனர்.

பாதுகாப்பு இல்லை

உள்ளூர் என்றால் உறவினர்களின் உறவு இருக்கும். வெளியூர் என்பதால் பக்கத்து வீட்டுக்காரர்களின் பரிவை எப்போதும் எதிர்பார்க்க முடியாது அல்லவா. அவர்களுக்கும் பரபரப்பான வேலை இருப்பதால் முதுமையில் தனிமையை தவிர இனிமையை காண முடிவதில்லை. முதியவர்கள் தனிமையில் வசிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தங்களுடைய மகன் அல்லது மகள் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வாழும் போது முதியவர்கள் தனியாக வசிக்கும் நிலை ஏற்படுகிறது. குழந்தை இல்லாதவர்கள், விபத்து அல்லது வேறு காரணங்களால் வாரிசுகளை இழந்த முதியோர்களும் தனிமையில் வசிக்கும் நிலை உருவாகிறது.

இவ்வாறு வசிக்கும் முதியவர்களுக்கு உரிய பாதுகாப்பு இருப்பதில்லை. கொரோனா காலங்களில் தனியாக வசித்த முதியோர் உணவு கூட சரியாக கிடைக்காமல் சிரமப்பட்டனர். என்னதான் மனதை இளமையாக வைத்திருந்தாலும், உடலை முதுமையில் இருந்து விலக்க முடிவதில்லையே. இதனால் முதுமை காலத்தில் பாதுகாப்புகள், தேவைகள், உதவிகள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள் என்று இருக்கத்தானே செய்யும்.

இத்தகைய முதியோர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்ன என்பது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

பிறரை சார்ந்து வாழும் நிலை

அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் கருணாகரன்: அனைத்து துறைகளிலும் நாம் என்னதான் வளர்ச்சியடைந்திருந்தாலும் மூத்த குடிமக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். ஒன்றுக்கு தீர்வுகண்டால் மற்றொரு பிரச்சினை முளைக்கின்றது. கடைசி காலத்தில் முதியவர்களை கவனிக்க யாருமில்லை என்ற நிலையே உள்ளது. பொதுவாக முதுமை காலத்தில் உடல் ரீதியான பிரச்சினைகள், சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம், காது கேளாமை, கண்புரை நோய், முதுகுவலி, கழுத்துவலி, மனசோர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் நிதி பாதுகாப்பு இருப்பதில்லை. முதுமையில் வாட்டும் தனிமை பலரை உணர்ச்சி வசப்படுத்துகிறது. இந்தியாவில் 80 சதவீதம் பேர் முதுமையில் கஷ்டத்தையே சந்திக்கின்றனர். 20 சதவீத மக்களே சுகமாக கடைசிகாலத்தில் வாழ்வதாக அறியவருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் உடல் பலவீனமடைவதால், அவர்களது வேலையை அவர்களால் கவனித்து கொள்ள இயலாத நிலைமையில் பிறரை சார்ந்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மூத்தோர் உடல் உறுதியுடன் இருக்கவும், மனரீதியான பிரச்சினையின்றி வாழவும் வழிவகை செய்ய வேண்டும். அவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள நிதிஆதாரம் வேண்டும். மேலும் முதியவர்களை கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு பரிந்துரைக்க வேண்டும். மூத்தகுடிமக்கள் நாட்டின் வழிகாட்டிகள், அவர்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்கள், இளைஞர்கள் அவர்களது அறிவுறைபடி செயல்பட வேண்டும். முதியவர்களை மதித்து மனிதாபிமானத்துடன் நடத்தி அவர்கள் மகிழ்ச்சியுற வாழவும், அவர்களது தனிமையை போக்கி முடிந்தபோதெல்லாம் அவர்களுக்காக சிறிதுநேரம் ஒதுக்கி அவர்களோடு செலவிடுவது நல்லது.

குழந்தை போல் மாறும் முதியவர்கள்

சிதம்பரம் முதியோர் இல்ல காப்பாளர் சுகுமார்: இன்றைய காலத்தில் பெரிய கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்தவர்கள் எல்லாம் தனித்தனி குடும்பமாக பிரிந்து வாழ்கின்றனர். பெரும்பாலான இளைஞர்கள், தங்கள் பெற்றோருடன் வசிக்காமல் வெளிமாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இதனால் பல முதியவர்கள் தனிமையில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. முதியவர்கள் தங்கள் வாழ்நாட்களை தங்களது குழந்தைகளுக்காக உழைத்து விட்டு, கடைசி காலத்தில் தனக்கென்று பணம் சேர்த்து வைக்காமல் இருந்து விடுகின்றனர். 60 வயதுக்கு மேல் தங்களால் பணம் ஈட்ட முடியாத நிலையில் சிறு சிறு தேவைகளுக்கு மகனையோ, மகளையோ எதிர்பார்க்க வேண்டிய நிலையில் உள்ளனர். வீடுகளில் முதியவர்கள் சிலர் குழந்தையின் குணத்தை போன்று மாறி விடுகின்றனர். இவர்களது சில செயல்களை மகன் அல்லது மகள்கள் பெரிய இடையூறாக நினைக்கிறார்கள். 60 வயதாகி விட்டாலே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் முதியவர்களை வாட்ட தொடங்கி விடுகிறது. மாத்திரை, மருந்துகள் மற்றும் சில்லறை தேவைகளுக்கு மகன் அல்லது மகளை எதிர்பார்க்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் ஏற்படும் சிறு சிறு மன உளைச்சல்களால் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியேறி வந்து விடுகின்றனர். இன்றைய இளைய தலைமுறையினர் முதியவர்களிடம் அன்புடனும், அனுசரணையுடன் இருந்தாலே பெரும் பிரச்சினைகளை தவிர்த்து விடலாம்.

பராமரிப்பில் வைப்பது சிறந்தது

பெண்ணாடம் எறையூர் கலியன்: 82 வயதான நான் வீட்டில் தனிமையிலே வசிக்கிறேன். இளமையில் ஓடியாடி வேலை பார்த்து குடும்பத்தை கரை சேர்த்த, எங்களை கரை சேர்க்க யாரும் இருப்பதில்லை. இதனால் என்னை போன்ற பலர் முதுமையில் ஓய்வெடுக்க கூட முடியாமல், மனஅழுத்தத்திலேயே இருக்கின்றனர். வாழ்க்கையின் கடைசி கால கட்டம் தான் முதுமை. ஆனால் இந்த வாழ்க்கையில் பலரின் அன்பையும், ஆதரவையும் பெற வேண்டும் என்ற ஏக்கத்திலே வாழ்க்கை முடிந்து விடுகிறது. தனிமையில் இருப்பவர்கள் நம்மை பற்றி யாராவது விசாரிக்க வேண்டும், தமது அன்பை புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். வெளியூர்களில் குடும்பத்துடன் இருக்கும் பிள்ளைகள் தங்களுடன் பேச மாட்டார்களா?, வீட்டுக்கு வந்து செல்லமாட்டார்களா? பேரக்குழந்தைகளை பார்க்க முடியவில்லையே? என முதுமையில் ஏங்கி தவிக்கின்றனர். எனவே முடிந்தவரை பெற்றோர்களையும், முதியவர்களையும் பராமரிப்பில் வைப்பது சிறந்தது.

Tags:    

Similar News