பொது மருத்துவம்
null

அதிக நேரம் தூங்கினாலும் ஆபத்துதான்!

Published On 2024-10-05 03:06 GMT   |   Update On 2024-10-08 02:43 GMT
  • சிலருக்கு தலைவலி பிரச்சனையையும் உண்டாக்கிவிடும்.
  • அதிக தூக்கம் மட்டுமின்றி போதுமான நேரம் தூங்காததும் இதய நோய், நீரிழிவு, கவலை, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு வித்திடும்.

தூக்கமின்மை பிரச்சனையால் பலரும் அவதிப்படும் நிலையில் சிலர் அதிக நேரம் தூங்கும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இரவில் காலதாமதமாக தூங்கிவிட்டு காலையில் 10 மணியை கடந்த பிறகும் எழுந்திருக்க மனமில்லாமல் படுக்கையில் உழல்வார்கள். அந்த தூக்கம் 8 மணி நேரத்தை கடந்தும் நீடிக்கும். இதற்கிடையே பகல் வேளையில் குட்டி தூக்கம் போடுபவர்களும் இருக்கிறார்கள். இப்படி அதிக நேரம் தூங்குவதும் ஆபத்தானதுதான்.

தினமும் 6 மணி முதல் 8 மணி நேரம் வரை தூங்குபவர்களுடன் ஒப்பிடும்போது, 8 மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் உறங்குபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அத்துடன் டைப்-2 நீரிழிவு நோய், உடல் பருமன், இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தையும் அதிகரிக்கச் செய்துவிடும். அதிக நேர தூக்கம் மனச்சோர்வுக்கும் ஆளாக்கும். அறிவாற்றல் குறைபாட்டுக்கும் வழிவகுக்கும். சிலருக்கு தலைவலி பிரச்சனையையும் உண்டாக்கிவிடும்.

அதிக தூக்கம் மட்டுமின்றி போதுமான நேரம் தூங்காததும் இதய நோய், நீரிழிவு, கவலை, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு வித்திடும். அதிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் குறைவான நேரம் தூங்குவதை விட அதிக நேரம் தூங்குவதுதான் பாதிப்பை அதிகரிக்க செய்துவிடும்.

தூங்கும் நேரத்தை முறைப்படுத்தாமல் தூக்கமின்மை பிரச்சனையை எதிர்கொள்வது, உட்கார்ந்த நிலையிலேயே அதிக நேரத்தை செலவிடுவது, மது அருந்துவது, தூக்கத்திற்காக மருந்து சாப்பிடுவது, ஹைப்போ தைராய்டிசம், இதய நோய் உள்ளிட்டவை அதிக நேரம் தூங்குவதற்கு முக்கிய காரணிகளாக அமைகின்றன. அதற்கு இடம் கொடுக்காமல் தூக்க நேரத்தை வரைமுறைப்படுத்திக்கொள்வது அவசியமானது.

Tags:    

Similar News