- வயிற்றில் இருந்தும், சிறுகுடலில் இருந்தும் விரைவாக உறிஞ்சப்படுகிறது.
- மனச்சோர்வு, பதற்றம் அல்லது நரம்பு பதற்றத்தை உருவாக்குகிறது.
ஆல்கஹால் என்ற சொல் 'அல்குஹ்ல்' என்ற அரபு வார்த்தையிலிருந்து வந்தது. தற்போது மது வகைகள் அனைத்தும் ஆல்கஹால் எனப்படுகிறது. ஆல்கஹாலின் வீரியத்தை அது உடலுக்குள் சென்ற பின் ஏற்படுத்தும் விளைவுகளை வைத்து அறிந்து கொள்ள முடியும்.
வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்படும் ஆல்கஹால் விரைவாக உறிஞ்சப்படுகிறது. இதற்கு காரணம் இது அதிக கொழுப்பில் கரையக் கூடியது மற்றும் உடலின் தசைகளில் விரைவாக பரவக்கூடியது. குறிப்பாக வயிற்றில் இருந்தும், சிறுகுடலில் இருந்தும் விரைவாக உறிஞ்சப்படுகிறது.
உதாரணமாக 60 மி.லி. ஆல்கஹாலை வெறும் வயிற்றில் சில நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டால், ஒன்று முதல் 1½ மணி நேரத்திற்குள் ரத்தத்தில் கலந்து விடும். மேலும் 6 முதல் 8 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக ரத்தத்தில் இதன் தன்மை நீடித்து காணப்படும்.
ஆல்கஹாலின் மிக முக்கியமான பாதிப்பு மத்திய நரம்பு மண்டலத்தில் காணப்படுகிறது. இது மத்திய நரம்பு மண்டலத்தை ஆக்கிரமிக்கும் போது மனச்சோர்வு, பதற்றம் அல்லது நரம்பு பதற்றத்தை உருவாக்குகிறது.
ஒரு வித தூக்க கலக்கம், மந்தமான பேச்சு, மன குழப்பம், நிலையற்ற நடை, இரட்டை பார்வையை ஏற்படுத்துகிறது. உடல் மூளையின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் உடல் மன ஒருங்கிணைப்பு இழப்பு ஏற்படுகிறது.
மது குடித்ததும், ஆல்கஹால் வயிறு வழியாக ரத்த ஓட்டத்தில் சேரும். ஒரு நபர் குடிக்கும் மதுவில் 20 சதவிகிதம் வயிற்றின் வழியாக ரத்த ஓட்டத்தில் வேகமாக உறிஞ்சப்படுகிறது. மேலும் 80 சதவிகிதம் ஆல்கஹால் சிறுகுடலால் உறிஞ்சப்படுகிறது.
ஆல்கஹால் ரத்த ஓட்டத்தை அடைந்தவுடன், அது கல்லீரலுக்குச் சென்று வளர்சிதை மாற்றமடைகிறது. ஆல்கஹால் மூலக்கூறுகளை உடைக்கும் நொதிகளைக் கல்லீரல் உற்பத்தி செய்கிறது.
வளர்சிதை மாற்றமடையாத (மெட்டபாலிசம் ஆகாத) ஆல்கஹால் உடலில் மீதம் இருக்கும். எஞ்சிய அனைத்தும் வியர்வை, சிறுநீர் மற்றும் உமிழ்நீர் மூலம் உடலை விட்டு வெளியேறுகிறது.
பொதுவாக, ஆல்கஹால் உடலில் பசியின்மை, கல்லீரல் சிதைவு, இரைப்பை, அமில சுரப்பை அதிகரித்து அழற்சியை அதிகரிக்கிறது. கடுமையான கணைய அழற்சியும் நாளடைவில் ஏற்பட்டு உடலின் பல்வேறு செயல்பாடுகளும் பாதிக்கும் நிலையை உருவாக்குகிறது. மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு என்பது இதனால் தான்.