கோடைகால நோய்களுக்கு தீர்வு தரும் வீட்டு வைத்தியம்!
- கோடைகாலத்தில் உஷ்ணமும் வியர்வையும் உடலை இயல்பாகவே பலவீனப்படும்.
- 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
கோடைகாலம் என்பது இளவேனிற், முதுவேனிற் காலங்களையே குறிக்கும். சித்திரை, வைகாசி மாதங்கள் இளவேனிற் காலம் என்றும், ஆனி, ஆடி மாதங்கள் முதுவேனிற் காலம் என்றும் அழைக்கப்படும்.
ஆனால் தற்சமயம், பின்பனி காலமாகிய மாசி, பங்குனி மாதங்களிலேயே வெயில் வறுத்தெடுத்து வியர்வைத் துளி ஆவியாகும் அளவுக்கு பருவநிலை மாற்றங்கள் பாடாய்படுத்துகிறது.
கோடைகாலத்தில் ஏற்படும் உஷ்ணமும் வியர்வையும் நம் உடலை இயல்பாகவே பலவீனப்படுத்துகின்றது. கோடை காலத்தில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக பல்வேறு பாதிப்புகள், நோய்களை நாம் சந்திக்கிறோம்.
இந்த நோய்களுக்கு இயற்கையான முறையில் நமது வீடுகளில் உள்ள இயற்கை பொருட்களை பயன்படுத்தியும், எளிய சித்த மருந்துகளை பயன்படுத்தியும் தீர்வு காணலாம்.
நம் உடலின் சராசரி வெப்பநிலை 98.4 டிகிரி பாரன்ஹீட். கோடைகாலத்தில் வெப்பம் 100 டிகிரியை தாண்டும். சில இடங்களில் வெப்ப அலை கடுமையாக வீசும். அப்போது வெயில் அளவு 106 முதல் 112 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்கும்.
இது போன்ற சூழ்நிலையில் உடல் வெப்பம் அதிகரித்து உடலில் நீர்ச் சத்து குறைந்து களைப்பு, மயக்கம் வரலாம். வெப்ப தாக்குதல் அதிகமாகும் போது ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப பக்கவாதம் தாக்கும் ஆபத்து உள்ளது. அதுபோன்ற நிலையில் உடல் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படலாம்.
சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாய் முடியலாம். எனவே இதில் இருந்து பாதுகாக்க கவனமாக இருக்க வேண்டும்.
கோடைகால நோய்கள்
கோடைகாலத்தில் டைபாய்டு, மஞ்சள் காமாலை, அமீபியாசிஸ், அம்மை போன்ற நோய்கள் பரவும். இயற்கையிலேயே கோடைகாலத்தில் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் உடல் வன்மை குறைந்து காணப்படும். ஆகையால் தான் மாசி முதல் ஆடி வரையுள்ள காலம் `ஆதாந காலம்' என்று சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது.
நாம் பருகும் நீரும், உண்ணும் உணவும் சுத்தமானதாக இருக்க வேண்டும். 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். குடிக்கும் நீரை கொதிக்க வைத்து வடிகட்டி ஆறவைத்து பருகலாம். நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சோம்புத் தண்ணீர், சீரகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
வியர்க்குரு:
கோடை காலத்தில் தான் வியர்வை சுரப்பிகளில் அழுக்குகள் சேர்ந்து வியர்க்குருக்கள் தோன்றும். அதிகப்படியான வியர்வை பிசுபிசுப்பால் சில கிருமிகள் வியர்வையுடன் சேர்ந்து தேமல், படை, தினவு போன்ற சரும தொற்றுகளை ஏற்படுத்தும்.
மருந்து:
சிறிதளவு அருகம்புல்லின் சாறு எடுத்து அதனுடன் சமஅளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி ஆற வைத்து ஒரு பாட்டிலில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை அடிக்கடி தோலின் மீது பூசி பயன்படுத்த வேண்டும்.
நலங்கு மாவு:
குளிப்பதற்கு நலங்கு மாவு பயன்படுத்தலாம். நலங்கு மாவு என்பது வெட்டிவேர், விலாமிச்சுவேர், கோரைக்கிழங்கு, கிச்சிலி கிழங்கு, பாசிப்பயறு, கார்போகரிசி, சந்தனம் இவைகளை சமஅளவில் எடுத்து பொடித்த பொடியாகும். இதை சோப்பிற்கு பதிலாக உடலில் தேய்த்து குளித்து வரவேண்டும். இதனால் தேமல், படை, தினவு, தோல் வறட்சி இவைகள் நீங்கி தோல் பளபளப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் காணப்படும்.
அதிகப்படியான வியர்வைக்கு:
உள்ளங்கை, உள்ளங்கால் வியர்வை, தோலின் வியர்வை, வியர்வை நாற்றம் அதிகம் உள்ளவர்கள் ஆவாரம்பூ, மகிழம்பூ இவை இரண்டையும் டீ போல போட்டு குடித்தும், வெளிப்பூச்சாக ஆவாரம்பூ, மகிழம்பூ, கஸ்தூரி மஞ்சள், வேப்பிலை இவைகளை சமஅளவில் அரைத்து தேய்த்து குளித்தும் வரலாம்.
தலை அரிப்பு, பொடுகு, முடி உதிர்தல்:
வெயில் காலத்தில் பிரத்தியேகமாக ஏற்படும் தலை அரிப்பு, பொடுகு, முடி உதிர்தல் இவைகளை நீக்க கடுக்காய்த் தோல், நெல்லிவற்றல், மிளகு, கஸ்தூரி மஞ்சள், வேப்பம் வித்து இவைகளை சமஅளவு எடுத்து பொடித்து பசும்பாலில் காய்ச்சி குளிப்பதற்கு 15 நிமிடம் முன்பாக தலையில் நன்றாக தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணிந்து கண்களுக்கும் நல்ல குளிர்ச்சி உண்டாகும்.
சிறுநீரகக் கற்கள்:
போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருத்தல், வெயிலில் அலைதல், அசைவ உணவுகளை அதிகமாக விரும்பி சாப்பிடுதல் இவைகளால் உணவில் உள்ள அதிகப்படியான கால்சியம், ஆக்சலேட், பாஸ்பரஸ் போன்றவை சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப்பாதையில் தேங்கி கற்களாக உருவாகின்றது. மேலும் சிறுநீரகத் தொற்றினாலும் கற்கள் உருவாகும். சிறுநீரை அடக்காமல் கழித்து விடவேண்டும்.
வெட்டிவேர், நன்னாரி வேர் கலந்த தண்ணீர் குடிக்கலாம். சுரைக்காய், வாழைத்தண்டு, சவ்சவ், முள்ளங்கி, பீர்க்கங்காய், எலுமிச்சம்பழம், இளநீர், பீன்ஸ் இவைகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சிறுகன்பீளை செடி, நெருஞ்சில் விதை இவைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர வேண்டும். வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
சின்னம்மை:
கோடைகாலத்தில் காணப்படும் தொற்றுகளில் முதன்மையானது சின்னம்மை. இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடித்தொடர்பு, காற்று மூலமாக எளிதில் தொற்றும் நோய். முதல் அறிகுறியாக காய்ச்சல், உடல்வலி, கொப்புளங்களை ஏற்படுத்தும்.
கொப்புளங்களை நகங்களால் கீறவோ, கிள்ளவோ கூடாது. ஒரு வாரத்தில் தானாகவே மறைந்து விடும். வேப்பிலை, வேப்பிலை தளிரில் படுக்க வைக்க வேண்டும். வேப்பிலை, மஞ்சள் அரைத்த நீரால் உடலைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
சீரகம், கொத்தமல்லி சேர்த்து கொதிக்க வைத்த நீரை அடிக்கடி குடித்து வரவும். நுங்கு, இளநீர், பதனீர், தர்ப்பூசணி, கிர்ணி, முலாம்பழம், மோர், சின்ன வெங்காயம், கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற உணவுகளை அடிக்கடி எடுக்க வேண்டும்.
தசைப்பிடிப்பு வலிகள்:
கோடைகாலத்தில் ஏற்படும் அதிவியர்வை, நீரிழப்பு, தொற்று நோய்களான வாந்தி, வயிற்றுப்போக்கு முதலியவற்றால் உடலில் உள்ள பொட்டாசியம் அளவு குறையும். உடலில் உள்ள நரம்புகள் மற்றும் தசைகளின் இயக்கத்திற்கு பொட்டாசியம் அவசியமான ஒன்று. இது குறைந்தால் உடல் களைப்படைந்து தசைகள் இழுத்துக் கொள்ளும். சில நேரங்களில் கால் மூட்டுகள் வலுவிழந்து நடக்க முடியாத நிலை கூட ஏற்படும்.
இதைத் தவிர்க்க பொட்டாசியம் நிறைந்த உணவுகளான இளநீர், தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, திராட்சை, வாழைப்பழம், நுங்கு, பதநீர் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கோடை காலத்தில் சூரியக் கதிர்களில் இருந்து வரும் புறஊதாக் கதிர்களில் ஒருவகை தோலின் ஆழம் வரை ஊடுருவி செல்லக் கூடியது. இதனால் ஒவ்வாமை, தோல் சுருக்கங்கள் மற்றும் இளவயதிலேயே வயதான தோற்றம் போன்றவைகளை ஏற்படுத்தும்.
மற்றொரு வகை கதிர்கள் தோலின் மேற்பகுதியை ஊடுருவி செல்லக் கூடியது. இவை தோலின் நிறமிச் செல்களை பாதித்து மெலனின் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் உடல் கருநிறம் அடைகின்றது.
இதை தவிர்க்க முகம், உதடுகளில் வெண்ணெய் பூசிக்கொள்ளலாம். உடலில் தேங்காய் எண்ணெய் தேய்த்து கொள்ளலாம். புற ஊதாக்கதிர்கள் உடலை தாக்காதவாறு துணிகளால் உடலை மூடிக் கொள்ளலாம்.
நீர்க்கடுப்பு-சூடு பிடித்தல்
கோடையில் நம் உடலில் நீரின் அளவு குறைவதால், வெளியேறும் சிறுநீரின் அளவும் குறைகின்றது. தினமும் 3 முதல் 4 லிட்டர் நீர் குடிக்க வேண்டும். இளநீர், நுங்கு, எலுமிச்சை, நன்னாரி சர்பத், முலாம் பழம், தர்ப்பூசணி பழம், வெள்ளரி போன்ற நீர் சத்துள்ள பழங்கள் சாப்பிட வேண்டும்.
எலுமிச்சைச்சாறு, பனங்கருப்பட்டி, கொடம்புளி, சுக்குப்பொடி, ஏலப்பொடி, தண்ணீர் சேர்த்து தயாரிக்கப்படும் `பானகம்' உடலுக்கு குளர்ச்சியைத் தரும். இது நீர்க்கடுப்புக்கு அருமருந்தாகும். எலுமிச்சை, கொடம்புளி, புளி, அன்னாசி, மாதுளை போன்ற பல வகையான பானகங்களை கோடைகாலத்தில் குடிக்கலாம்.