கூல் ட்ரிங்க்ஸ் கூட குடிக்க கூடாதா? - நிபுணர்கள் எச்சரிக்கை
- சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளிர்பானங்கள் அருந்துவதால் பலவிதமான உடல் கோளாறுகள் ஏற்படும் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
- குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது.
தினமும் காலை எழுந்ததும் பலர் கட்டாயம் காபி குடிப்பதை விரும்புவார்கள். காபி குடிக்காவிட்டால் அந்த நாளே ஓடாது என்று சொல்லுவார்கள். அதே போல், இன்றைய காலத்தில் நம் வாழ்வோடு குளிர்பானங்கள் இரண்டற கலந்துவிட்டன என்றே கூறலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இதனை அருந்தாமல் இருக்க முடிவதில்லை.
ஒருமுறை சுவை பழகி போனவர்களுக்கு இன்னும் சொல்லவே வேண்டாம். ஆனால், இயற்கையாக அல்லாத செயற்கையாக விற்கப்படும் குளிர்பானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை. அவற்றில் கெமிக்கல், சர்க்கரை மற்றும் தண்ணீர் இதைத் தவிர ஒன்றுமே இருக்காது. எந்த சத்துமில்லாத, ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள இவ்வகை குளிர்பானங்களை எதற்காக விரும்பி அருந்துகின்றனர் என்று தெரியாமலே பலர் அருந்தி வருகின்றனர்.
சாப்பிட்டது செரிமாணம் ஆவதற்கு பலரும் குளிர்பானங்களை அருந்துவார்கள். சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளிர்பானங்கள் அருந்துவதால் பலவிதமான உடல் கோளாறுகள் ஏற்படும் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், குளிர்பானங்களை அருந்தாமல் இருப்பது உடலுக்கு பல வழிகளில் நல்லது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் உடல் பருமன் மற்றும் வகை 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது.
குளிர்பானங்களில் பாஸ்போரிக் அமிலம் (பல் பற்சிப்பியை சேதப்படுத்துகிறது), அதிக பிரக்டோஸ் கார்ன் சிரப் (குழிவுகளை உண்டாக்குகிறது) மற்றும் அசெசல்பேம் பொட்டாசியம் (புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையது) உள்ளது என்று வோக்கார்ட் மருத்துவமனையின் டாக்டர் அனிகேத் முல் கூறினார்.