கோடை கால நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி?
- வெப்பம், வறண்ட வானிலை ஆகியவை சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும்.
- கோடை காலத்தில் பெரும்பாலான மக்கள் நீரிழப்பு பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர்.
கோடை கால நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து வேலூர் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை ஆயுர்வேத டாக்டர் சுபஸ்ரீ பியூலா விளக்கம் அளித்துள்ளார்.
ஆயுர்வேத டாக்டர்
வேலூர் சத்துவாச்சாரி அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனையில் ஆயுர்வேத டாக்டராக பணிபுரிபவர் சுபஸ்ரீ பியூலா. இவர் பெண்களுக்கு கோடை காலத்தில் ஏற்படும் நோய்களும், அதிலிருந்து நம்மை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும் கூறினார்.
அவர் கூறியதாவது:-
கோடை காலம் வந்துவிட்டது, அதிகரித்து வரும் வெப்பநிலை பல நோய்களை கொண்டு வரலாம். இந்தியாவில், கோடைக்காலம் ஆண்டின் வெப்பமான பருவமாகும். பொதுவாக மார்ச் முதல் ஜூன் வரை வெப்பமான வானிலை இருக்கும். இந்த நேரத்தில் தோல், கண்கள் மற்றும் இரைப்பை அமைப்பு உள்பட முழு உடலையும் வெப்பம் பாதிக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால், கடுமையான வெப்பம் மற்றும் இடைவிடாத வறட்சி ஆகியவை பொதுவான கோடைக்கால நோயைக் கொண்டுவரும். கோடையில் ஏற்படக்கூடிய சில நோய்கள் மற்றும் அவற்றைத் தவிர்ப்பதற்கான முறைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
கோடையில் ஏற்படும் நோய்கள்
கோடை காலத்தில் பெரும்பாலான மக்கள் நீரிழப்பு பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். ஒருவர் அருந்தும் நீர் அவரது உடல் தேவையை பூர்த்தி செய்யாதபோது நீரிழப்பு ஏற்படுகிறது. நீரிழப்பு சிறுநீர் பாதை தொற்றுகளுக்கு வழிவகுக்கும். எனவே கோடையில் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். கோடை காலத்தில் வானிலை வெப்பமாக இருக்கும். இது கிருமிகள் அல்லது பாக்டீரியாக்கள் வளர ஏற்றதாக இருக்கும்.
கோடை மாதங்களில் வெப்பம், வறண்ட வானிலை ஆகியவை சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும். சிறுநீரகக் கல் உருவாவதற்கான ஆபத்து வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. இருப்பினும், 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் கோடையில் சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்படுகின்றனர். இதில் பெண்களை விட ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
கோடை காலத்தில் சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு முதன்மையான காரணம் நீர்ச்சத்து குறைபாடுதான். நம்மில் பெரும்பாலோர் ஆண்டு முழுவதும் மற்ற பருவங்களை விட வெப்பமான மாதங்களில் வெளியில் இருக்கிறோம். இதன் விளைவாக அதிக வியர்வை வெளியேறுகிறது. சரியான நீரேற்றம் இல்லை என்றால், உடல் திரவங்கள் உணவு தாதுக்களுடன் அதிக செறிவூட்டப்பட்டு கற்களாக மாறக்கூடும்.
அன்றாட செயல்பாடுகளைத் தொடரவும், நீர் இழப்பை ஈடுகட்டவும் அதிக தண்ணீர், பழங்கள் மற்றும் பழச்சாறுகள், மோர் மற்றும் இளநீர் ஆகியவற்றை அருந்த வேண்டும்.
தோல் பிரச்சினைகள்
நமது தோலில் வெளிப்படும் பகுதி குளிர்காலம் மற்றும் கோடைக்காலம் ஆகிய இரண்டிலும் பாதிக்கப்படுகிறது. நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது தீங்கு விளைவிக்கும். சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் தோலில் ஊடுருவி பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும், உடலில் மெலனின் உள்ளடக்கம் குறைவாக உள்ளவர்கள் மெலனோமா (ஒரு வகை தோல் புற்றுநோய்) போன்ற கடுமையான தோல் நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகின்றனர். நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது தோல் எரிச்சல், வறட்சி மற்றும் வெடிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்.
சளி, தட்டம்மை, சின்னம்மை, சொறி, தோல் கொப்பளம் போன்றவை கோடை காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான நோய்களாகும். வெப்பத் தடிப்புகள் பொதுவாக ஆடைகளால் மூடப்பட்ட பகுதிகளில் ஏற்படும். குழந்தைகளுக்கு இந்த தொற்று அடிக்கடி வலி மற்றும் அரிப்பை ஏற்படுத்துகிறது.
இரைப்பை குடல் அழற்சி
வெப்பம் அதிகரிக்கும் போது, ஒருவரது செரிமான கொள்ளளவு குறைந்து சில செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே, உங்கள் உணவுப் பழக்கத்தை கவனித்துக்கொள்வது மற்றும் வெப்பத்தை வெல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பது அவசியம்.
வெப்பம் அதிகரிக்கும் போது வயிற்றுக் குடல் அழற்சி பொதுவாக எல்லா வயதினருக்கும் காணப்படும். அதன் அறிகுறிகளில் சில வாந்தி, வயிற்றுப்போக்கு, மலத்தில் ரத்தம், நீர்ப்போக்கு மற்றும் வயிற்று வலி ஆகியவை அடங்கும்.
மூலிகை, பழங்கள்
நீங்கள் காரமான, வறுத்த, உணவுகளின் பிரியராக இருக்கலாம், ஆனால் கோடையில் அவற்றைத் தவிர்க்க வேண்டும். அவை குடல் புண், வீக்கம் மற்றும் வயிற்று அழற்சியை கூட ஏற்படுத்தும். புரோபயாடிக்குகள் குடலுக்கு உகந்த பாக்டீரியாவைக் கொண்டிருப்பதால் உதவியாக இருக்கும். மோரில் புரதம் நிரம்பியுள்ளது. அதில் உள்ள பாக்டீரியாக்கள் உங்கள் செரிமான செயல்முறையை எளிதாக்கும். வயிற்றுப்போக்கை நீக்கும்.
கோடையில் உடல் சூட்டைத் தணிக்க நன்னாரி, வெட்டிவேர், பூசணிக்காய், கற்றாழை, தர்பூசணி, வெள்ளரி, நெல்லிக்காய் போன்ற மூலிகை மற்றும் பழங்களை சாப்பிடலாம்.
உடற்பயிற்சி
கோடைகாலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட உணவு முறை, வானிலைக்கு ஏற்ப புதிய உடற்பயிற்சி முறை. வெப்பமான காலநிலையின் ஆரம்பம் உங்கள் உடலை பல்வேறு வகையான நோய்களுக்கு உள்ளாக்கும். எனவே ஆரோக்கியமான கோடைக்காலத்திற்கு நான் கூறிய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும். அவ்வாறு செயல்பட்டால் கோடை வெப்பத்தில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.