பொது மருத்துவம்

சமையலறை சுத்தமும் ஆரோக்கியமும்

Published On 2024-09-14 04:35 GMT   |   Update On 2024-09-14 04:35 GMT
  • வீடாக இருந்தாலும் சமைக்கும்போது முன்புற பாதுகாப்பு ஆடை (ஏப்ரன்) கட்டிக்கொள்ளலாம்.
  • பிரிட்ஜில் அதிக காய்கறிகள், இறைச்சி வகைகளை நாட்கணக்கில் சேர்த்து வைப்பது தவறு.

அக்னி மூலையில் சமையலறை அமைப்பது மட்டுமல்லாமல் அதை மாடுலர் கிச்சன் என்று நவீனமாக அமைப்பதை இல்லத்தரசிகள் விரும்புகிறார்கள். நீரும், நெருப்பும், உணவுப்பொருளும் புழங்கும் இடம் என்பதால் அங்கு சுத்தத்திலும், சுகாதாரத்திலும் கவனம் கொள்வது அவசியம்.

காய்கறிகள் மற்றும் உணவுப்பொருள்கள் அனைத்தும் ரசாயனங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுவதோடு, சில இடங்களில் செயற்கை முறையில் பதப்படுத்தபட்ட பின்பு விற்பனைக்கு வருவதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

வீடாக இருந்தாலும் சமைக்கும்போது முன்புற பாதுகாப்பு ஆடை (ஏப்ரன்) கட்டிக்கொள்ளலாம். தலைமுடியை கவர் செய்து கட்டிக்கொள்வது சிறந்தது. சமைக்கும்போது கை நகங்கள் வெட்டப்பட்டு சுத்தமாக இருப்பதுடன் அதிக ஆபரணங்கள் இல்லாதிருப்பதும் நல்லது. சமையலறையில் இ-கோலை, சால்மொனெல்லா, காம்பைலோபாக்டர் போன்று பல வித கிருமிகள் இருக்கின்றன. அவை பெரும்பாலும் கைகள், துணிகள், உணவுப்பொருட்கள் ஒன்றோடு ஒன்று புழங்குவதாலும், சமையலறைக்குள் வரும் வளர்ப்பு பிராணிகள் மூலமாகவும் பரவுகின்றன.

அதனால் வாரம் ஒருமுறை சமையலறை முழுமையாக சுத்தம் செய்யப்படவேண்டும். குளிர்சாதனப்பெட்டி, பாத்திரம் கழுவும் சிங்க் ஆகியவற்றில் கிருமிகள் இருக்கலாம். சமையலறை டஸ்ட் பின் வெளிப்புறமாக வைக்கப்படுவது முக்கியம். பாத்திரங்கள் அல்லது உணவுப்பொருட்களில் பூஞ்சை படர்ந்திருந்தால் அவற்றை உபயோகப்படுத்துவதை உடனடியாக தவிர்க்க வேண்டும்.

கைகளில் வெட்டுக்காயங்கள் இருந்தால், சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதனால் பாக்டீரியாக்கள் உணவில் பரவுவதை தடுக்கலாம். அவ்வப்போது கைகளை சோப்பு அல்லது ஹேண்ட்வாஷ் கொண்டு சுத்தம் செய்வதோடு துணியால் துடைக்கலாம். அடுப்பில் இருக்கும் பாத்திரத்தின் மீது எப்போதுமே கவனம் இருப்பது முக்கியம். துடைக்கும் துணிகள், பிளாஸ்டிக் கவர் போன்றவற்றை எரியும் அடுப்புக்கு அருகில் வைக்க வேண்டாம்.

 

பிரிட்ஜில் அதிக காய்கறிகள், இறைச்சி வகைகளை நாட்கணக்கில் சேர்த்து வைப்பது தவறு. காய்கறிகளை சுத்தப்படுத்தும் சமையலறை சிங்க்-ல் இறைச்சியை கழுவாமல் கிச்சனுக்கு வெளியே கழுவ வேண்டும். இறைச்சி, காய்கறிகளை நறுக்குவதற்காக தனித்தனியாக கத்திகள் மற்றும் கட்டிங் போர்டு பயன்படுத்துவது சுகாதாரம்.

மார்க்கெட்டிலிருந்து வாங்கப்படும் பழ வகைகள் அல்லது சில ஆர்கானிக் பொருட்கள் மீது புரூட் பிளை என்ற பழ ஈக்கள் உட்காரும் காரணத்தால் அசுத்தமாக ஏற்படும். அதனால் பழங்களை நன்றாக கழுவிய பின்பு உண்ணலாம் அல்லது பிரிட்ஜில் வைக்கலாம். சமைக்கப்பட்ட பொருட்கள் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அறை வெப்பத்தில் வைக்காமல் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். பிரிட்ஜில் வைக்கும்போது சமைக்காத உணவையும், சமைத்த உணவையும் ஒன்றாக வைப்பதை தவிர்க்க வேண்டும்.

Tags:    

Similar News