தெரிந்து கொள்வோமா... குரங்கம்மை நோயின் அறிகுறிகள்
- குரங்கம்மை பாதிப்பின் அறிகுறியானது ஒரு வாரத்தில் தெரிய வரும்.
- குரங்கம்மை நோயினால் 3 முதல் 10 சதவீதம் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
1958-ம் ஆண்டில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்ட குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது, குரங்கம்மை நோய். தற்போது இந்த நோய் உலகளாவிய பொது சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த நோயாக மாறி உள்ளது. குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது.
உலக நாடுகளில் பலருக்கும் இதன் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. தமிழகத்தில் யாருக்கும் இதுவரையில் பாதிப்பு இல்லை. தீவிர காய்ச்சல், உடல் வலி மற்றும் கொப்பளங்கள் ஆகியன குரங்கம்மை நோயின் அறிகுறியாகும்.
குரங்கம்மை பாதிப்பின் அறிகுறியானது ஒரு வாரத்தில் தெரிய வரும். தும்மும் போது வெளியாகும் எச்சில் துளிகள் மூலம் இந்த நோய் பரவுகிறது. மேலும் உடலில் சிரங்கு, காயங்களை தொடுவதின் மூலமாகவோ, பாதிக்கப்பட்ட நபரின் கறைபட்ட ஆடைகள், கிருமி தொற்றியுள்ள துணிகள், படுக்கைகள் போன்றவற்றை தொடுவதின் மூலமும் குரங்கம்மை பரவுகிறது.
உடலுறவு மூலம் இந்த நோய் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது. சில நேரம் பாதிக்கப்பட்ட விலங்குகள் மூலம் மனிதனுக்கு பரவ வாய்ப்புகள் உள்ளது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை, மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும். அவர்களை பராமரிப்பவர்கள், பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும்.
மேலும், குரங்கம்மை நோயினால் 3 முதல் 10 சதவீதம் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே குரங்கம்மை நோய் குறித்த அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிகளை அணுகி அதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.