ஞாபக மறதியும்... தூக்கமின்மையும்...
- தூக்கம் குறையும்போது உடலின் நலமும் உள்ளத்தின் நலமும் பாதிக்கப்படுகின்றன.
- ஒருவருக்கு தொடர்ந்து தூக்கம் கெடும்போது பசி குறையும்.
முதுமையில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளில் தூக்கமின்மை முதலிடம் பிடிக்கிறது. 60 வயதிற்கு பிறகு அனைவருக்குமே தூக்கம் சற்று குறைவது இயல்பானதுதான்.
இந்த வயதில் 5 மணி நேரம் தூக்கம் கூட போதுமானது தான். ஆனால் தூங்கும் நேரத்தின் அளவைவிட எவ்வளவு நேரம் ஒருவர் தொடர்ந்து ஆழ்ந்த தூக்கத்தை பெறுகிறார் என்பதுதான் முக்கியம். உடலுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம், மீண்டும் புத்துணர்வோடு செயல்படுவதற்கு மூளை தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும்.
ஒருவருடைய உடல் உழைப்பு, தூங்கும் விதம், சுற்றுச்சூழல், உடல்நலம், மனநலத்தை பொறுத்து தூக்கம் அமைகிறது. முதுமை காரணமாகவோ, உடல்நிலை காரணமாகவோ தூங்கும் நேரம் குறைந்தாலும் தூக்கத்தின் அவசியம் குறைவதில்லை.
தூக்கம் குறையும்போது உடலின் நலமும் உள்ளத்தின் நலமும் பாதிக்கப்படுகின்றன. இள வயதில் தேவையான அளவு தூங்காதவர்களுக்கு 40 வயதில் ஞாபக மறதி வந்து விடுகிறது. தேவையில்லாமல் கோபம் வருகிறது. ஒருவருக்கு தொடர்ந்து தூக்கம் கெடும்போது பசி குறையும். அஜீரணம் தலைகாட்டும். உணவின் அளவு குறையும். உடல் எடை குறையும். பணியில் ஆர்வம் குறையும். சோர்வும் தலைவலியும் நிரந்தரமாகிவிடும். மாத கணக்கில் நல்ல தூக்கம் இல்லாதவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
1900-ம் ஆண்டுகளில் சராசரியாக மனித தூக்கம் 8 மணி நேரம் என்ற நிலையில் இருந்தது. தற்போது தூக்கம் 6 மணி நேரத்துக்கும் கீழாக குறைந்துவிட்டது என்கிறது ஒரு ஆய்வு முடிவு. பல வீடுகளில் பணியிலிருந்து திரும்பிய பிறகும்கூட செல்போனில் நீண்ட நேரம் பேசுவது, கணினியில் வேலை செய்வது போன்றவற்றில் நேரம் செலவழிவதால் பலருக்கும் தூக்க நேரம் இன்னும் சுருங்கிப்போகிறது. இன்னும் சிலர் தூக்க மாத்திரைகளை அவர்களாகவே மருந்துக் கடைகளில் வாங்கிச் சாப்பிடுவார்கள். ஒரு கட்டத்தில் அந்த மாத்திரையின் பக்கவிளைவால் தூக்கம் வராமல் அவதிப்படும் நிலையும் வரலாம் என மருத்துவ துறையினர் எச்சரிக்கிறார்கள்.