மைட்டோகாண்ட்ரியா பாதிப்பும், கருவுறுவதில் ஏற்படும் சிக்கலும்...!
- மைட்டோகாண்ட்ரியா பழுதாக இருந்தால், கருவுறும் குழந்தையும் பாதிக்கப்படுகிறது.
- பெற்றோர் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளும் அளவுக்கு, பிள்ளைப்பேறு மாறிவிடும்.
மரபணுவில் உள்ள இழைமணி (மைட்டோகாண்ட்ரியா) பழுதாக இருந்தால், கருவுறும் குழந்தையும் பாதிக்கப்படுகிறது. இப்படி பிறக்கும் குழந்தைக்கான குறைபாட்டை முன்தாகவே தடுக்க ஆரோக்கியமான பெண்ணின் சினை முட்டையிலிருக்கும் கருமையப் பகுதியை, குறைபாடுள்ள பெண்ணின் சினை முட்டையில் பொருத்திக் கருவுறச் செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
விலங்குகளிடம் இந்த ஆய்வை நடத்தியதில் வெற்றிகரமான முடிவு கிடைத்திருக்கிறது. இப்படியெல்லாம் மனிதக்கருவில் விளையாட வேண்டுமா என்று பலர் கடுமையாக எதிர்க்கவும் செய்கிறார்கள். இதற்கு காரணம், இந்த புதிய மருத்துவம் காரணமாகப் பிறக்கும் குழந்தையின் உடலில் 2 தாய், ஒரு தந்தையின் மரபணுக்கூறுகள் இடம்பெறும். பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால், அதன் மைட்டோகாண்ட்ரியாவில் செய்த திருத்தம், அதன் சந்ததிகளிடமும் தொடரும்.
மைட்டோகாண்ட்ரியா திருத்தம் ஒரு முறை செய்யப்பட்டால், அடுத்தடுத்து வழிவழியாக வந்துகொண்டே இருக்கும். இயற்கையின் படைப்பில் இப்படி விளையாடலாமா? என்ற எதிர்ப்பு குரல்கள் எழுகின்றன.
மரபணு இழை கோளாறு ஏன் ஏற்படுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. அதைவிட கொடுமை இந்த குறையை, அடுத்துவரும் சந்ததிக்கும் தந்துவிடுவோமோ என்று ஒரு தாய் மருகுவதுதான். அந்தக் கவலையைப் போக்குவதைவிட, நல்ல விஷயம் வேறு உண்டா? என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
ஆனால், இந்த தொழில்நுட்பத்தை அனுமதித்தால் தன்னுடைய மகன் அல்லது மகள் எப்படி இருக்க வேண்டும் என்று பெற்றோர் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளும் அளவுக்கு, பிள்ளைப்பேறு மாறிவிடும் என்பதும் பலருடைய குற்றச்சாட்டு. மிகவும் அபூர்வமான தருணத்தில் மட்டும் பயன்படுத்தி, குறையுள்ள குழந்தை பிறப்பதை தடுக்கலாம்.
ஆனால், அதையே வியாபாரமாக்கி எல்லாக் கருக்களிலும் மருத்துவர்கள் மாற்றங்களைச் செய்ய அரசு அனுமதிக்கக்கூடாது என்ற வாதமும் இருக்கிறது.
பிறக்கப்போகும் குழந்தையை கேட்டுக்கொண்ட பிறகு, பிள்ளைப்பேறு தொடர்பாக பெற்றோர் முடிவு எடுப்பதில்லை. அப்படி இருக்கும்போது மரபணு இழை பாதிப்புள்ளவர்களின் விஷயத்தில் மட்டும், ஏன் புதிய நடைமுறையை அனுமதிக்கக் கூடாது என்ற குரலும் எழாமல் இல்லை.