ரத்த தானம் பற்றிய கட்டுக்கதைகள்-உண்மைகள்
- பலர் ரத்த தானம் செய்வதற்கு தயங்குகிறார்கள்.
- உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும் என்று கருதுகிறார்கள்.
ரத்த தானம் செய்வது உன்னத சேவையாக கருதப்படுகிறது. இருப்பினும் பலர் ரத்த தானம் செய்வதற்கு தயங்குகிறார்கள். ரத்த தானம் செய்தால் உடல் பலவீனமடையும், உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும் என்று கருதுகிறார்கள். ஆனால் ரத்த தானம் செய்வது ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கும் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. ரத்த தானம் பற்றிய பொதுவான கட்டுக்கதைகளில் சிலவற்றை பார்ப்போம்.
ரத்த தானம் செய்வது நரம்புகளுக்கு வேதனையை ஏற்படுத்தும்
உண்மை:
ரத்தம் எடுப்பதற்காக நரம்புக்குள் செருகப்படும் ஊசி காயத்தை ஏற்படுத்தாது. நரம்புகளுக்கும் எந்த பாதிப்பையும் உண்டாக்காது. ஊசியால் துளையிடப்பட்ட இடம் ஓரிரு நாளிலேயே இயல்பாகிவிடும். ரத்த தானம் செய்த பிறகு சோர்வாக இருப்பதாக உணரலாம். பழம் அல்லது பழச்சாறு பருகுவதன் மூலம் அந்த சோர்வில் இருந்து சட்டென்று மீண்டு விடலாம். நிறைய தண்ணீர் குடிப்பதும் உடலுக்கு பலம் சேர்க்கும்.
ரத்த தானம் செய்வது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும்
உண்மை:
ரத்த தானம் செய்வது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும், உடலை பலவீனப்படுத்தும் என்பதில் உண்மை இல்லை. உடலில் உற்பத்தி செய்யப்படும் ரத்தத்தில் 30 சதவீதம் உடல் உறுப்புகளால் பயன்படுத்தப்படாமல்தான் இருக்கிறது. எனவே ரத்த தானம் செய்வதால் எந்த பாதிப்பும் நேராது. ரத்த தானம் செய்த சில மணி நேரங்களிலேயே ரத்த சிவப்பணுக்கள் மீண்டும் உருவாகிவிடும். புதிய ரத்தமும் உற்பத்தியாக தொடங்கிவிடும்.
ரத்த தானம் செய்பவருக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடும்
உண்மை:
ரத்த தானம் பெறும் ரத்த வங்கிகளுக்கு உலக சுகாதார நிறுவனமும், செஞ்சிலுவை சங்கமும் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திருக்கின்றன. கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசியைத்தான் பயன்படுத்த வேண்டும், பிறருக்கு பயன்படுத்திய ஊசியை பயன்படுத்தக்கூடாது போன்ற பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் பின்பற்றப்படுகின்றன. அதனால் ரத்த தானம் மூலம் நோய்த்தொற்று பரவுவதற்கு வாய்ப்பு இல்லை.
நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்யக்கூடாது
உண்மை:
தினமும் இன்சுலின் செலுத்திக்கொள்பவர்கள், மருந்து மாத்திரைகளை அதிகம் உட்கொள்பவர்கள் ரத்த தானம் செய்வதை தவிர்க்கலாம். மற்றவர்கள் டாக்டரிடம் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கலாம்.
பெண்கள் ரத்த தானம் செய்யக்கூடாது
உண்மை:
ரத்த தானம் செய்வதற்கு பெண்கள் முற்றிலும் தகுதியானவர்கள். ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள், ரத்த சோகை பாதிப்புக்கு ஆளானவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது. இது ஆண்களுக்கும் பொருந்தும். ரத்த தானம் செய்வதற்கு ஒரு டெசிலிட்டருக்கு 12.5 கிராம் ஹீமோகுளோபின் (லிட்டருக்கு 125 கிராம்) தேவைப்படுகிறது. அதற்கும் குறைவான இருப்பவர்கள் ரத்த தானம் செய்ய தகுதி இல்லை. அதேபோல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ரத்த தானம் செய்யக்கூடாது.
வயதில் சிறியவராகவோ, முதுமை அடைந்தவராகவோ இருந்தால் ரத்த தானம் செய்யக்கூடாது
உண்மை:
ரத்த தானம் செய்வதற்கு சிறியவர், பெரியவர் என்ற வரைமுறை இல்லை. எனினும் ரத்த தானம் செய்வதற்கான குறைந்த வயது வரம்பு 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வயது வரம்பு 65. இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கருத்துப்படி, ரத்த தானம் செய்பவர்களில் பெரும்பாலானோர் 50 மற்றும் 60 வயது உடையவர்களாக இருக்கிறார்கள்.