நிபா வைரஸ் அறிகுறிகள்- தடுப்பு முறைகள்
- நோயாளிகளின் சளி, உமிழ் நீர், வியர்வை மூலமாக பரவுகிறது.
- தொற்று ஏற்பட்ட 5 முதல் 15 நாட்களுக்குள் அறிகுறிகள் வெளிப்படும்.
கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக 14 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் 50 பேருக்கும் மேற்பட்டோர் வைரஸ் அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கேரளாவில் பரவும் நிபா வைரஸ் பாதிப்பு எல்லையோர தமிழக பகுதிக்குள் பரவாமல் இருக்க தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கேரளாவில் இருந்து கோவை மற்றும் நீலகிரிக்கு பஸ்கள் மற்றும் வாகனங்களில் வருபவர்கள் எல்லையோரம் தீவிர மருத்துவ சோதனைக்கு பின்னரே இங்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாடுகாணி, சோலாடி, பாட்டவயல், நம்பியார்குன்னு, தாளூர் ஆகிய 5 சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு கண்காணிக்கிறார்கள். வாகனங்களில் வருபவர்கள் யாருக்காவது காய்ச்சல், இருமல், சளி பிரச்சனை உள்ளதா என சோதித்து பார்க்கிறார்கள். மேலும் வாகன ஓட்டிகளுக்கு துண்டுபிரசுரங்களையும் வினியோகித்து வருகிறார்கள்.
அதே போல கோவை-கேரளா எல்லையில் வாளையார், வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்பகவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் சிறப்பு தற்காலிக முகாம் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நிபா வைரசின் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்து நீலகிரி மாவட்ட
நிர்வாகம் பொதுமக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
நிபா வைரஸ் நோய் பழந்தின்னி வவ்வால் மற்றும் பன்றி ஆகியவற்றின் சிறுநீர், எச்சில் மற்றும் இதர திரவங்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சளி, உமிழ் நீர் மற்றும் வியர்வை மூலமாக மற்றவர்களுக்கு பரவுகிறது. பழந்தின்னி வவ்வால்கள் கடித்த பழங்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது.
நோய் அறிகுறிகள்
கடுமையான காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுயநினைவிழத்தல், மனக்குழப்பம், கோமா ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும். கிருமி தொற்று ஏற்பட்ட 5 முதல் 15 நாட்களுக்குள் இந்த அறிகுறிகள் வெளிப்படும். மேலும் அறிகுறிகள் தென்பட்ட 24 மணி முதல் 48 மணி நேரத்துக்குள் தீவிர மயக்க நிலை, சுயநினைவிழத்தல் மற்றும் மனக்குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தடுக்கும் முறைகள்
1. விலங்குகள் கடித்த பழங்கள், காய்கறிகளை உபயோகப்படுத்தக் கூடாது.
2. காய்கறிகள் மற்றும் பழங்களை நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.
3. இறந்த வவ்வால்கள், பன்றிகள் இதர விலங்குகளை தொடுவதை தவிர்க்க வேண்டும்.
4. பாதிக்கப்பட்ட நபரை தனிமைப்படுத்த வேண்டும்.
5. பொது இடங்களுக்கு சென்று வரும்போது சோப்பினால் கை கழுவுவதை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
6. வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
7. தேவையின்றி காடுகள் மற்றும் குகை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
8. காய்ச்சல் அறிகுறி தென்பட்டவுடன் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
இதேபோல கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில் நிபா வைரஸ் விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு உமிழ்நீர், சிறுநீர், சளி போன்றவை மூலம் நேரடியாகவும் பரவுகிறது.
எனவே பொது இடங்களில் தும்மும் போதும், இருமும்போதும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக் கொள்ள வேண்டும்.
பொது சுகாதாரத்துறை சார்பாக தமிழ்நாடு- கேரளா எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் சுகாதாரக்குழு நியமிக்கப்பட்டு நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவது கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வரும் நபர்களின் விவரங்களை உடனே மாவட்ட சுகாதார அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.