அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் மனநல பாதிப்புகள்
- ஸ்மார்ட்போன் மீதான மோகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
- மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இன்றைய நவீன காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு இல்லாத இடமே இருக்காது. பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் பழக்கத்தை அதிகமாகக் கொண்டுள்ளனர். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் சில நன்மையான விளைவுகள் இருப்பினும், பல்வேறு தீய விளைவுகளும் நிறைந்துள்ளது. இதனைப் பலரும் அறிந்தும் ஸ்மார்ட்போன் மீதான மோகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மக்கள் ஸ்மார்ட்போன் திரையை மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால், இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பலரும் அறிவதில்லை. அதிகளவிலான ஸ்மார்ட்போன் பயன்பாட்டினால் கண்கள் பலவீனமடைவதுடன், உடலின் மற்ற பாகங்களும் பாதிக்கப்படலாம். ஆய்வு ஒன்றில் வெளியான அறிக்கையில் ஒரு நாளைக்கு 4 மணி நேரத்திற்கும் அதிகமாக ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
சிந்திக்கும் திறன் பாதிப்பு
ஒருவர் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். இது அவர்களின் மன ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால், மனச்சோர்வு ஏற்படுவதுடன், சிந்திக்கும் திறன் பாதிப்படையலாம். நீண்ட நேரம் மொபைல் பயன்பாட்டில் இருப்பது அவர்களுக்கு மொபைல் மீதான நாட்டத்தையே அதிகரிக்கிறது. இது மற்ற முக்கியமான விஷயங்களில் செலுத்தப்படும் ஈடுபாட்டைக் குறைக்கிறது.
உணர்ச்சி ரீதியான நிலையற்றத் தன்மை
ஸ்மார்ட்போன் பயன்பாடு உணர்ச்சி ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக சமூக ஊடகங்களின் தாக்கம் அவர்களுக்கு மனச்சோர்வு, பதட்டம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இது அவர்களுக்கு உணர்ச்சி ரீதியான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
மனச்சோர்வு
சமூக ஊடகங்களில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பது பயனற்ற தன்மையை அதிகரிக்கலாம். இது இறுதியில் மன அழுத்தத்தைத் தருவதாக அமைகிறது. சமூக ஊடங்களை நீண்ட நேரம் உற்று நோக்குவது மனச் சோர்வை அதிகரிப்பதுடன் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தலாம்.
குறைவான செயல்திறன்
நீண்ட நேரமாக ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது அவர்களின் செயல்திறனைக் குறைக்கிறது. இது மோசமான செயல்திறனை ஏற்படுத்துகிறது. இதனால் வேலையில் ஈடுபாடு குறைவதுடன், சரியான நேரத்தில் செய்ய வேண்டிய செயல்கள் செய்ய முடியாமல் போகலாம். இந்த தாமதமான செயல்பாட்டு மன அழுத்தம், பதட்டம் போன்ற மனநலத்தைப் பாதிக்கும் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
உறவில் சிக்கல்கள்
தொலைபேசி அடிமையாகி விடுவது குடும்பம் அல்லது பார்ட்னர்களுடனான உறவுகளுக்குத் தீங்கு விளைவிக்கலாம். மற்றவர்கள் முன்னிலையில் தொலைபேசியைத் தொடர்ந்து பயன்படுத்துவது, அவர்களைப் புறக்கணிக்கப்பட்டதாக இருக்கலாம். இது உறவுகளுக்குள் பிரச்சனை மற்றும் மோதலை ஏற்படுத்தலாம். அதே சமயம், துணையுடன் நேரடியாக உரையாடுவதைக் காட்டிலும், செல்போன் மூலமாக தொடர்பு கொள்வது உறவின் நெருக்கத்தைக் குறைக்கிறது.