உடல் எடையை பாதுகாப்பாக குறைக்கும் வழிமுறைகள்
- உணவுப்பொருட்களுக்கு பதிலாக முழு தானியங்களை உட்கொள்வது பசியை கட்டுப்படுத்தும்.
- உடல் எடை மேலாண்மையை பேணுவதற்கு உடற்பயிற்சி அவசியமானது.
உடல் பருமன் பிரச்சினையை தவிர்ப்பதற்கும், அதிகரித்த உடல் எடையை பாதுகாப்பாக குறைப்பதற்கும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இவை..
உணவு-உடல் செயல்பாடு
உணவு பழக்கம் மற்றும் உடல் செயல்பாடு இவை இரண்டும் உடல் எடை குறைப்பு விஷயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உணவு உட்கொள்ளும் விஷயத்தில் கட்டுப்பாடுகளை பின்பற்றுவதுடன், உடல் இயக்க செயல்பாடுகளை தொடர்ச்சியாக பின்பற்றுவதும், கண்காணிப்பதும் உடல் எடை குறைவதற்கு உதவும் என்று ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன.
சர்க்கரை-கார்போஹைட்ரேட்
இன்றைய உணவு வழக்கத்தில் சர்க்கரையும், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளும் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளன. அவை உடல் பருமனுடன் தொடர்புடையவை. குறிப்பாக வெள்ளை அரிசி, வெள்ளை ரொட்டி, பாஸ்தா போன்ற கார்போஹைட்ரேட் கலந்த சுத்திகரிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை விரைவாக அதிகரிக்க செய்யும். உடலில் கொழுப்பு சேர்வதை ஊக்குவிக்கும், இன்சுலின் வெளியிட்டை தூண்டும். எனவே இத்தகைய சுத்திகரிக்கப்பட்ட உணவுப்பொருட்களுக்கு பதிலாக முழு தானியங்களை உட்கொள்வது பசியை கட்டுப்படுத்தும். அதிக கலோரிகள் உட்கொள்வதை தடுக்கும். உடல் எடையை சீராக நிர்வகிக்க உதவும்.
நார்ச்சத்து
நார்ச்சத்து என்பது தாவர அடிப்படையிலான கார்போஹைட்ரேட் ஆகும். இது உடல் எடை நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது வயிறு நிறைவாக உட்கொண்ட திருப்தியை தரும். கலோரிகளை உட்கொள்ளும் அளவை குறைக்கும். முழு தானியங்களில் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், பட்டாணி, பருப்பு மற்றும் நட்ஸ் வகைகள் போன்ற நார்ச்சத்து நிரம்பப்பெற்ற பொருட்களை உட்கொள்வது நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கும் உணர்வை கொடுக்கும். அதிகமாக சாப்பிடுவதை தடுக்கும்.
உடற்பயிற்சி
உடல் எடை மேலாண்மையை பேணுவதற்கு உடற்பயிற்சி அவசியமானது. ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற ஏரோபிக் பயிற்சிகளில் ஈடுபடலாம். அத்துடன் உடற்பயிற்சி வல்லுனர்களின் வழிகாட்டுதல்படி வலு தூக்குதல் உள்ளிட்ட கடினமான பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். இந்த இரண்டு வகை பயிற்சிகளும் கலோரிகளை எரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும், உடல் எடை குறைப்பை ஊக்குவிக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.
பானங்கள்
சர்க்கரை கலந்த பானங்கள், மது, அதிக கலோரி கொண்ட காபி போன்ற பானங்கள் ஊட்டச்சத்து நன்மைகளை வழங்காமல் கலோரிகளை அதிகரிக்க செய்யலாம். கலோரி உட்கொள்ளலை குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் தண்ணீர், மூலிகை தேநீர் அல்லது கருப்பு காபியை தேர்வு செய்யலாம்.