null
`Work From Home' மன ஆரோக்கியத்தை பாதிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்
- ஐடி நிறுவனங்கள் தான் Work from Home நடைமுறையை கொண்டு வந்தன.
- அமெரிக்காவைச் சேர்ந்த Sapien Labs ஆராய்ச்சி நிறுவனம் தகவல்.
கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிலிருந்தே வேலை செய்தனர். அந்த காலகட்டத்தில், வீட்டில் இருந்து வேலை செய்யும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது.
அமேசான் மற்றும் இன்ஃபோசிஸ் மற்றும் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும் வசதிகளை வழங்கின.
கொரோனா தொற்று கட்டுக்குள் வரத்தொடங்கிய பிறகும் சில ஆண்டுகளாக இன்றும் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் விருப்பத்தை வழங்குகின்றன.
ஆனால் நீண்ட நேரம் வீட்டில் இருந்து வேலை செய்வது மக்களின் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான Sapien Labs உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மனநலம், வீட்டிலிருந்து வேலை செய்பவர்களை விட சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளது.
அலுவலகத்தில் மற்றவர்களுடன் ஒத்துழைப்பதும், அலுவலகத்தில் உள்ள சூழலும் மன நலனில் பெரும் பங்கு வகிப்பதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
65 நாடுகளைச் சேர்ந்த 54,000 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். மனநலத்தை மேம்படுத்துவதில் சக ஊழியர்களுடனான உறவு முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவில், வீட்டில் இருந்து வேலை செய்பவர்களை விட அலுவலகத்தில் இருந்து பணிபுரிபவர்களின் மனநலம் சிறப்பாக இருப்பதாகவும், மேலும் ஊழியர்களின் சிரமத்திற்கு பணிச்சுமையே முக்கிய காரணம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வேலை மற்றும் வாழ்க்கையில் சமநிலை போன்ற காரணங்கள் அடிக்கடி வலியுறுத்தப்படும் அதே வேளையில், வேலை செய்யும் இடத்தில் நல்ல உறவுகள் மற்றும் வேலையில் பெருமைப்படுதல் ஆகியவை மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை என்று அறிக்கை காட்டுகிறது.
அதேசமயம் இந்தியாவில், அலுவலகத்திலிருந்து பணிபுரியும் பணியாளர்கள் சிறந்த மனநலத்துடன் இருப்பது கண்டறியப்பட்டது. மற்ற நாடுகளை விட இந்திய ஊழியர்களிடையே குழுப்பணியின் காரணமாக மனநலம் மேம்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் சோகமாகவும், தனிமைப்படுத்தப்பட்டதாகவும் உணர வாய்ப்புள்ளது. முற்றிலும் வீட்டிலிருந்து வேலை செய்வது குழப்பம், தேவையற்ற எதிர்மறை எண்ணங்கள் போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும் என்பதை ஆய்வு உறுதிப்படுத்துகிறது.