null
மலச்சிக்கலை தவிர்க்க உதவும் சித்த மருத்துவம்
- மலச்சிக்கல் இருந்தால் உடலில் ஏராளமான பிணிகள் வரும்.
- செரிமான மண்டலத்தின் மெதுவான அசைவால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.
மலம் கழிப்பது என்பது செரிமான அமைப்பின் கடைசி நிலை ஆகும். தொடர் மலச்சிக்கல் இருந்தால் உடலில் ஏராளமான பிணிகள் வரும்.
மலச்சிக்கலுக்கான காரணங்கள்:
1) நாம் உண்ணும் உணவில் இருந்து பெருங்குடல் அதிகப்படியான தண்ணீரை உறிஞ்சும் போது மலச்சிக்கல் ஏற்படுகிறது. செரிமான மண்டலத்தின் மெதுவான அசைவால், பெருங்குடலில் அதிக நீர் உறிஞ்சப்படுகிறது. இதன் விளைவாக மலம் உலர்ந்து மலம் கழித்தல் கடினமாகவும், வலியாகவும் மாறுகிறது.
2) உணவில் போதிய நார்ச்சத்து சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது.
3) நமது பரபரப்பான வாழ்க்கை முறைகள், மன அழுத்தம், மனக்கவலை, பயம் போன்ற உளவியல் பிரச்சனைகள்.
4) சரியான உடற்பயிற்சி இல்லாமல் ஒரே இடத்தில் நிலையாக இருந்து வேலை செய்வது.
5) மலம் வரும் போது அதை கழிக்காமல் அடக்குவது.
6) மாவுச்சத்து நிறைந்த உணவுகள், எண்ணெய் பலகாரங்கள், சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பது, தண்ணீர் குறைவாக குடிப்பது, தொடர் பயணங்கள், உடல் சூடு போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.
உணவுப் பழக்கவழக்கங்கள்:
1) உடல்சூடு குறைய நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
2) தினமும் 6-7 மணிநேரம் தொடர்ச்சியாக தூங்க வேண்டும்.
3) வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.
4) கிழங்கு வகைகள், காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
5) கோழிக்கறி சாப்பிடுவது உடல் வெப்பத்தை அதிகரிக்கும். ஆகவே கோழிக்கறி சாப்பிடும் போது எலுமிச்சை பழச்சாறு எடுப்பது நல்லது.
6) நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், இளநீர், தர்பூசணி சாறு, முலாம் பழச்சாறு, மோர் இவைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
7) சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். வயிற்றில் வாயு உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
8) மாவு பதார்த்தங்களை அளவாக எடுக்க வேண்டும்.
9) காலையில் எழுந்தவுடன் 2 டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு நடைப்பயிற்சி, ஆசனவாய் தசைகளை உறுதிபடுத்தும் பயிற்சிகள் செய்ய வேண்டும்.
10) சீரகம், கொத்தமல்லி, ஓமம் இவைகளை சிறிதளவு சேர்த்துக் கொதிக்க வைத்த தண்ணீரை காலை, இரவு குடித்து வர வேண்டும்.
சித்த மருந்துகள்:
சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கீழ்கண்ட ஏதாவது ஒரு மருத்துவ முறையை கையாளலாம்.
1) திரிபலா சூரணம் ஒரு டீஸ்பூன், இரவு உறங்கும் முன் வெந்நீரில் எடுக்க வேண்டும்.
2) நிலவாகை சூரணம் ஒரு டீஸ்பூன், இரவு உறங்கும் முன் வெந்நீரில் எடுக்க வேண்டும்.
3) மூலக்குடார நெய் 5-10 மி.லி. வீதம் இரவு தூங்கும் முன் எடுக்க வேண்டும்.