பொது மருத்துவம்

சிறுநீரக கற்களுக்கு ஓமியோபதி மருத்துவத்தில் சிறப்பு சிகிச்சை

Published On 2023-02-07 06:48 GMT   |   Update On 2023-02-07 06:48 GMT
  • சிறுநீரக கற்கள் வரக்காரணத்தையும், பாதிப்புகளை அறிந்து கொள்ளலாம்.
  • சிறுநீரகக் கற்கள் வந்தால் பின்பக்க விலாவில் வலி ஏற்படும்.

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அமுதம் ஆயுஷ் கூட்டுறவு மருத்துவமனையில் ஓமியோபதி டாக்டராக தினேஷ்குமார் பணியாற்றி வருகிறார். அவர் சிறுநீரக கற்கள் எதனால் உருவாகிறது, அதனால் ஏற்படும் பாதிப்புகள், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து கூறினார். அவர் கூறியதாவது:-

சிறுநீரகத்தில் கால்சியம் ஆக்சிலேட், யூரிக்ஆசிட், கார்பனேட் போன்ற தாதுக்கள் படிந்து நாளடைவில் அது சிறுநீரக கற்களாக உருவாகிறது. முறையற்ற உணவு பழக்க வழக்கங்களாலும், மாறிவரும் வாழ்வியலாலும் மனித உடலின் கழிவுகள் வெளியேற்றத்தில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அதிகம் சிறுநீரக கற்கள் உருவாகிறது. அண்மைக்காலமாக இளம் வயதினருக்கும், மாணவர்களுக்கும் சிறுநீரக கற்கள் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் தங்களுடைய கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்த சிறுநீரக கற்கள் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

காரணிகள்

சிறுநீரக கற்கள் அதிக அளவு அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கும், புகை பிடிப்பவர்கள் மற்றும் அதிக அளவு மது குடிப்பவர்களுக்கும் வருவதற்கு வாய்ப்பு அதிகம். சரியான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது, உப்புத்தன்மை நிறைந்த குடிநீர் மற்றும் சுகாதாரமற்ற குடிநீரை எடுத்துக் கொள்வதாலும் சிறுநீரக கற்கள் உருவாகும். அதிக அளவில் மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களுக்கும் சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

சிறுநீரகக் கற்கள் வந்தால் பின்பக்க விலாவில் வலி ஏற்படும். முதுகு வலி ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கத்திலும் அதிகரிக்கும். வலியுடன் குமட்டல் வாந்தி உருவாகும். சிறுநீரில் ரத்தம் காணப்படுதல், அடிவயிற்றில் வலி, சிறுநீர் இயல்பாக வெளியேறாமல் சிறுநீர் கழிப்பதில் வலி மற்றும் எரிச்சல் ஏற்படும். சிறுநீரில் கிருமி தொற்று பரவி காய்ச்சல் உண்டாகும். இடுப்பின் பின்புறம் மற்றும் முதுகுத்தண்டு அருகில் வலி ஏற்படும். சிறுநீரில் மணல் போன்ற கற்கள் காணப்படும். சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், உடல் சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும். இவை சிறுநீர் கற்கள் இருப்பதனால் ஏற்படும் அறிகுறிகள் ஆகும்.

உணவு பழக்க வழக்கங்கள்

சிறுநீரக கற்கள் வராமல் தவிர்க்க அசைவ உணவுகள் அதிகம் சாப்பிடக்கூடாது. பால் சார்ந்த பொருட்களையும், கீரைகளையும் சாப்பிடக்கூடாது. தக்காளி விதை, கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது. சிறுநீரக கற்கள் உருவாகாமல் இருக்க சுரைக்காய், வெண்பூசணி, வாழைத்தண்டு, வெள்ளரி, எலுமிச்சை சாறு, பீன்ஸ், பார்லி கஞ்சி ஆகியவற்றை அருந்த வேண்டும். தினமும் ஒருவர் மூன்று முதல் ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஓமியோபதி சிகிச்சை முறை

பொதுவாக ஒரு முறை சிறுநீரக கற்கள் உருவாகினால் மீண்டும் சிறுநீரக கற்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. சரியான உணவுப் பழக்கம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்தின் மூலம் மீண்டும் கற்கள் உருவாவதை தவிர்க்க முடியும். சிறுநீரக கற்களுக்கு நிரந்தர தீர்வு ஓமியோபதி மருத்துவத்தில் உள்ளது. சிறுநீரக கற்களின் அளவு, கற்கள் உருவாகி இருக்கும் இடம், அதன் தன்மை போன்றவற்றை ஆராய்ந்து அவர்களின் தனித்தன்மையை பொருத்தும் சிகிச்சை அளிக்கப்படும். பக்க விளைவுகள் இல்லா நிரந்தர தீர்வுக்கு ஓமியோபதி மருத்துவத்தில் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News