கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்கும் வழிமுறைகள்: டாக்டர், பொதுமக்கள் ஆலோசனை
- வாரத்திற்கு 2 முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் சூடு தணியும்.
- ஜீன்ஸ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் தினமும் வெயில் சதமடித்துக் கொண்டிருக்கிறது. அனல் காற்று வீசுகிறது.
கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காக சிலர் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களை தேடி செல்கின்றனர். பலர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். கோடை வெப்பத்தில் இருந்து பிள்ளைகளை காத்து கொள்வதற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
வெப்பத்தால் ஏற்படும் வியர்வை மூலமாக உடலில் இருந்து வெளியேறும் உப்பு சத்துகளை ஈடு செய்வதற்காக நீர் மோர், பதநீர், நுங்கு, இளநீர், தர்பூசணி, எலுமிச்சை சாறு மற்றும் பழச்சாற்றை அருந்தும்படி ஆலோசனை வழங்கப்படுகிறது.
கோடைக்கால நோய்களை தவிர்க்கவும், வெப்பத்தாக்கத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மத்திய, மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்கள் விடுத்து வருகின்றன. அந்த வகையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பின்பற்ற வேண்டிய எளிய சில வழிமுறைகளை அறிவித்து உள்ளன.
குறிப்பாக நடப்பு ஆண்டு சுட்டெரிக்கும் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என்றும், வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் வெப்ப அலை தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியமானது. வெயிலில் அதிக நேரம் செல்ல வேண்டிய நிலைமை இருந்தால் வெப்பத்தை தடுக்கும் ஆடைகளை அணியுங்கள்.
குறிப்பாக பருத்தி ஆடைகளே சிறந்தது. அடர் நிறம் மற்றும் இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிருங்கள். சன்ஸ்கிரீன் பூசுவதற்கு மறக்காதீர்கள். மதுபானம் அருந்துவதை முற்றிலும் தவிருங்கள். மது அதிகம் அருந்தினால் நீரிழப்பை ஏற்படுத்தும். இதனால் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகும்.
மருத்துவ உதவியை நாடுங்கள்
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் மிக கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடாதீர்கள். மின்சார உபகரணங்களை அதிகமாக பயன்படுத்தாதீர்கள். அவையும் வெப்பத்தை உருவாக்கி வீட்டின் வெப்பநிலையை அதிகரித்துவிடும். வெயில் காலத்தில் ஏற்படும் தலைச்சுற்றல், குமட்டல், உடல் சோர்வு, உடல் பலவீனம் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். அவை வெப்ப பக்கவாதத்திற்கான எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம். தேவைப்பட்டால் மருத்துவ உதவியை நாடுங்கள்.
போதுமான அளவு தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். இல்லாவிட்டால் நீரிழப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். மொட்டை மாடி போன்ற கான்கிரீட் தளம் கொண்ட மேற்பரப்புகளில் அதிக நேரத்தை செலவிடாதீர்கள். அவை சூரியனின் கதிர்களை அதிகம் பிரதிபலிக்கும். உங்கள் உடலை சட்டென்று வெப்பமாக்கிவிடும். பகல் வேளையில் வீட்டின் ஜன்னல்களை மூடிய நிலையில் வைக்காதீர்கள். ஏனெனில் இது வெப்பத்தை அதிகப்படுத்தி அறையை இன்னும் சூடாக மாற்றும்.
அதிக நேரம் சூரிய ஒளி
வெயில் காலத்தில் நீர் நிலைகளில் நீந்துவது உடலை இதமாக்கும். எனினும் பாதுகாப்பான சூழல் கொண்ட நீர்நிலைதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். வெயில்படும்படியான இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் உலோகப் பொருட்களைத் தொடாதீர்கள். அவை அதிக வெப்பமடைந்து தீக்காயங்களை ஏற்படுத்தும். முகம் மற்றும் கண்களை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க தொப்பி, கண்ணாடி அணிய மறக்காதீர்கள். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், செரிமானம் ஆவதற்கு கடினமான உணவுகளை உண்ணாதீர்கள்.
ஏனென்றால் இந்த உணவுகள் மந்தமாக உணர வைக்கும். மேலும் உடலின் வெப்பநிலையை அதிகரிக்க செய்துவிடும். அதிக நேரம் சூரிய ஒளி சருமத்தில் படும்படி வைத்துக்கொள்ளாதீர்கள். அது தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று அறிவுறுத்தி உள்ளது.
கொளுத்திவரும் கோடை வெயிலை பொதுமக்கள் எவ்வாறு சமாளித்து வருகிறார்கள் என்பது பற்றி சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதில் விவரம் வருமாறு:-
வீட்டில் இருந்தபடி வேலை
கொசப்பேட்டையை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் நிர்மல் - பிரியா தம்பதி கூறும் போது, 'கோடையில் உணவு பழக்கத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் திட உணவுகளை குறைத்துவிட்டு திரவ உணவுகளை அதிகம் பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம். அதேபோல் சாலையின் ஓரத்தில் விற்பனை செய்யப்படும் பதநீரை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதுதவிர குழந்தைகளுக்கும் தேவையில்லாதவற்றை வாங்கி தருவதைவிட கோடைக்கு ஏற்ற தர்பூசணி பழம், கிர்ணி பழங்கள் வாங்கி தருகிறோம். அதேபோல் நிறுவனத்திலும் வீட்டில் இருந்து பணி செய்ய கூறியிருப்பதால் வெளியே செல்வது பெரும்பாலும் தவிர்க்கப்பட்டு வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கொரோனா காலத்தில் வழங்கியபடி வாய்ப்புள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணி செய்ய உத்தரவிடலாம். இதன் மூலம் ஓரளவு கோடையின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்க முடியும்' என்றார்.
சிக்கனுக்கு டாடா
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் பணியாற்றும் தனலட்சுமி, பிரித்தி ஆகியோர் கூறும் போது, 'கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக தினசரி பதநீர், நுங்கு வாங்கி சாப்பிடுகிறோம். இதுதவிர வீட்டில் எலுமிச்சை பழ ஜூஸ் அடிக்கடி குடித்து வருகிறோம். அத்துடன் வீட்டில் சிக்கன் சூடு என்பதால் கோடையில் சிக்கனுக்கு டாடா சொல்லப்பட்டு உள்ளது. அதேபோல் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ள குடிநீரை சுத்தமாக பயன்படுத்துவதில்லை. வெதுவெதுப்பான குடிநீரை தான் பயன்படுத்துகிறோம். குடிநீரும் வெளியே எங்கும் சாப்பிடாமல் தேவையான குடிநீரை வீட்டில் இருந்தே கொண்டு வந்து பருகுவதால் கோடையின் தாக்கத்தில் இருந்து ஓரளவு தப்பித்து வருகிறோம். வீட்டை விட்டு வெளியே போய்விட்டு மீண்டும் வீடு திரும்புவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. மதிய வேளைகளில் வெளியில் சென்றால் வியர்வையிலேயே குளிக்கும் அளவுக்கு வெப்பம் தகிக்கிறது' என்றனர்.
பழங்கள், காய்கறிகள்
அமைந்தகரை அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை (இந்திய மருத்துவம்) சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் வெண்தாமரை செல்வி கூறும் போது, 'கோடை வெயிலின் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கணினியில் வேலை பார்ப்பவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டால் பொன்னாங்கண்ணி தைலம் தேய்த்து குளித்தால் கண்களுக்கு குளிர்ச்சி தரும். அதேபோல் வாரத்திற்கு 2 முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் சூடு தணியும். உணவு முறையை பொறுத்தவரையில் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து மிக்சியில் அரைத்து அதனை பாலில் கலந்து காய்ச்சி அருந்துவதன் மூலம் உடல் சூடு குறையும்.
திராட்சை, கிர்ணிப்பழம், தர்பூசணி பழங்கள் மற்றும் கீரைகள், புடலங்காய், பீர்க்கன்காய், வெண் பூசணி, மஞ்சள் பூசணியை அதிகம் பயன்படுத்த வேண்டும். அத்துடன் சின்ன வெங்காயத்தை (சாம்பார் வெங்காயம்) நல்எண்ணெய், கடுகு, உளுந்து போட்டு வதக்கி சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட்டால் உஷ்ணம் குறையும். கண் எரிச்சல் அதிகம் இருப்பதாக உணருபவர்கள் இரவில் உள்ளங்காலில் வெண்ணெய் தடவி கொண்டு படுத்தால் கண் எரிச்சல் குறையும். ஆடைகளை பொறுத்தவரையில் காட்டன் ஆடைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
ஜீன்ஸ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. வெயிலில் செல்பவர்களுக்கு ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் என்பதால் நீர்மோர், தண்ணீர் அதிகம் குடித்துவிட்டு, குடைகள் மற்றும் தலையில் வைப்பதற்கான தொப்பிகளை எடுத்து செல்ல வேண்டும். வியர்வை துர்நாற்றத்தை போக்குவதற்கு குளிக்கும் தண்ணீரில் நலுங்கு மாவை கலந்து குளிக்க வேண்டும். சிறுநீர் கடுப்பு ஏற்பட்டால் வெட்டிவேரை இரவில் குடிநீரில் கலந்து காலையில் குடிக்கலாம். அதேபோல், எலுமிச்சம்பழம் பிழிந்து நன்னாரி சர்பத் அடிக்கடி குடிக்கலாம். காபியை தவிர்த்துவிட்டு டீயில் ஏலக்காய் போட்டு குடிப்பதால் சூட்டை தணித்து கோடையில் எந்தவித ஆரோக்கிய குறைபாடும் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது' என்றார்.
சூடுபிடித்த நுங்கு- பதநீர் வியாபாரம்
எழும்பூரில் நுங்கு- பதநீர் வியாபாரம் செய்யும் தென்காசி செல்வா கூறும் போது, 'கோடை வெயில் வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே இருப்பதால் நுங்கு, பதநீர் வியாபாரம் நன்றாக இருக்கிறது. தேவைப்படும் நுங்கு தென்காசியில் இருந்தும், பதநீர் மேல்மருவத்தூரில் இருந்தும் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வியாபாரம் வருகிற ஜூலை மாதம் வரை இருக்க வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காக நுங்கு, பதநீர் ஆகியவற்றை வாங்கி செல்கின்றனர்' என்றார்.
கூடுதல் குடிநீர்
மந்தைவெளியைச் சேர்ந்த வணிகர் பாலகிருஷ்ணன்-லதா தம்பதிகள் கூறும் போது, 'கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் தேவையில்லாமல் பகல் பொழுதில் வெளியே செல்ல வேண்டாம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால் வணிகராக இருக்கும் நான் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க முடியாது. ஆனால் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தரவேண்டி இருக்கிறது. எனவே தினசரி கூடுதல் தண்ணீர் குடிக்கிறேன். இதுதவிர வெளியே வந்தால் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்யும் நுங்கு, பதநீர், பழ ஜூஸ், நீர்மோர் போன்றவற்றை வாங்கி குடித்து ஓரளவு கோடை வெப்பத்தில் இருந்து தங்களை காத்து கொள்கிறோம். இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இதனால் தினசரி காலை மற்றும் மாலை இரண்டு வேளைகளும் குளிக்கிறோம். கோடை வெப்பம் தணியும் நாளை எதிர்நோக்கி காத்து கொண்டு இருக்கிறோம்' என்றனர்.
வெளியில் தலைகாட்டவில்லை
விருகம்பாக்கம் சொர்ண லட்சுமி கூறும் போது, 'கோடை என்றாலே விடுமுறை கொண்டாட்டம் ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் கோடை வெப்பத்தின் தாக்கம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அதுவும் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் உணவு பழக்கத்தையும் சற்று மாற்றி வருகிறோம். தண்ணீர் ஆகாரத்தை தான் அதிகம் சாப்பிட்டு வருகிறோம். டாக்டர்கள் கூறியபடி தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்வதில்லை. பழங்கள் மற்றும் கீரைகளையும் அதிகம் பயன்படுத்துவதால் பெரிய அளவில் கோடை வெப்பத்தால் பாதிக்கப்படவில்லை. இன்றும் ஓரிரு மாதங்களில் இதே உணவு பழக்கத்தை தான் கடைப்பிடிப்போம். வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக வீட்டிலே இருக்கிறோம். இதனால் வெளியில் தலை காட்ட முடியவில்லை' என்றார்.