பொது மருத்துவம்
null

தண்ணீர் தாகத்தை போக்கும் 10

Published On 2024-10-13 03:42 GMT   |   Update On 2024-10-13 06:06 GMT
  • பிஸியான கால அட்டவணையில் இயங்குபவர்கள் தண்ணீர் குடிக்க மறந்துவிடுவது இயல்பானது.
  • அடிக்கடி நினைவூட்டும் படி செல்போன், ஸ்மார்ட் வாட்சு போன்றவற்றின் மூலம் நினைவூட்டல்களை மேற்கொள்ளலாம்.

ஒருபுறம் மழை, மறுபுறம் வெயில் என பருவ காலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் உடல் நலனிலும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருக்க வேண்டியது அவசியமானது. வெப்பநிலையை ஒழுங்குபடுத்துதல், ஊட்டச்சத்துக்களை முக்கிய உறுப்புகளுக்கு எடுத்து செல்லுதல், நச்சுக்களை வெளியேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு உடல்செயல்பாடுகள் நடைபெறுவதற்கு நீர் முக்கிய பங்கு வகிக்கிறது.

இருப்பினும் பலரும் போதுமான அளவு தண்ணீர் பருகுவதில்லை. பிஸியான வேலை, மறதி, தாகத்தை உணராதது போன்ற காரணங்களை மையப்படுத்தி நீரேற்றத்தை அலட்சியம் செய்வது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். தண்ணீர் பருகும் விஷயத்தில் சில விதிமுறைகளை பின்பற்றுவது நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனைகள் எழாமல் தடுக்கும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்...

1. நீரின் தேவையை புரிந்து கொள்ளுங்கள்

உடலில் நீர்ச்சத்தை பேணுவதற்கான முதல் படி, உங்கள் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது என்பதை புரிந்து கொள்வதாகும்.

'ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்' என்பது பொதுவான வழிகாட்டுதலாக இருந்தாலும் வயது, உடல் எடை, உடல் இயக்க செயல்பாடு, காலநிலை போன்ற காரணிகளின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் நீரின் தேவை மாறுபடக்கூடும்.

உணவியல், ஊட்டச்சத்து நிபுணரை கலந்தாலோசித்து எவ்வளவு தண்ணீர் பருகவேண்டும் என்பதை தீர்மானிக்கவும்.

2. தண்ணீருடன் தொடங்குங்கள்

ஒவ்வொரு நாளையும் தண்ணீருடன் தொடங்குங்கள். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவதை வழக்கமாக்கிவிடுங்கள். பல மணி நேர தூக்கத்திற்கு பிறகு அருந்தும் அந்த நீர், வளர்சிதை மாற்றத்தை தூண்டவும், இழந்த நீர்ச்சத்தை மீட்டெடுக்கவும் உதவும்.

படுக்கை அறையில் தண்ணீர் பாட்டிலை வையுங்கள். காலையில் எழுந்ததும் அது கண்ணீல் பட்டு, தண்ணீர் பருகுவதை நினைவூட்டுவதாக அமைய வேண்டும். அப்படி தண்ணீர் பருகுவது நாள் முழுவதும் நேர்மறையான எண்ணங்களை கட்டமைக்கவும், நீரேற்றத்தை தக்கவைக்கவும் வழிவகை செய்யும்.

3. நினைவூட்டல் செய்யுங்கள்

பிஸியான கால அட்டவணையில் இயங்குபவர்கள் தண்ணீர் குடிக்க மறந்துவிடுவது இயல்பானது. அடிக்கடி நினைவூட்டும் படி செல்போன், ஸ்மார்ட் வாட்சு போன்றவற்றின் மூலம் நினைவூட்டல்களை மேற்கொள்ளலாம்.

4. நீர்ச்சத்து கொண்ட பொருட்களை உண்ணுங்கள்

உணவில் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்வது உடலில் நீரேற்றத்தை அதிகரிக்க செய்வதற்கேற்ற சிறந்த வழியாகும். அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட வெள்ளரி, தர்பூசணி, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட பழங்கள், காய்கறிகளை தினமும் உண்ணலாம்.

5.கண்காணியுங்கள்

ஒவ்வொரு முறையும் எவ்வளவு நீர் அருந்துகிறீர்கள், எத்தனை முறை அருந்துகிறீர்கள் என்பதை கண்காணியுங்கள். அது நீரேற்ற இலக்கை அடைவதை உறுதிப்படுத்த உதவும்.

6.தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நீரேற்றத்துடன் இருக்க தொழில்நுட்பம் பயனுள்ள சாதனமாக அமைந்திருக்கிறது. ஸ்மார்ட் வாட்டர் பாட்டில்கள் முதல் ஹைட்ரேஷன் ஆப்ஸ் வரை அதிக தண்ணீர் குடிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட கேஜெட்டுகள் பல உள்ளன. அவற்றை பயன்படுத்துவதன் மூலம் தண்ணீர் பருகும் வழக்கத்தை இடையூறு இன்றி பின் தொடரலாம்.

7. தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்லுங்கள்

எங்கு சென்றாலும் தண்ணீர் பாட்டிலை உடன் எடுத்து செல்லுங்கள். அது குறிப்பிட்ட நேரத்துக்குள் தண்ணீர் பருகுவதை எளிதாக்கும். அலுவலகம், ஜிம் என இடத்திற்கு ஏற்ப நேர்த்தியான பாட்டிலை தேர்ந்தெடுத்து அருகில் வைத்துக்கொள்ளலாம். அது தண்ணீர் பருக வேண்டும் என்பதை நினைவூட்டும் வண்ணம் இருக்க வேண்டும்.

8. தண்ணீருக்கு சுவை சேருங்கள்

வெறுமனே தண்ணீர் பருக பிடிக்கவில்லை என்றால் விரும்பிய பழங்கள், காய்கறிகள் அல்லது மூலிகைகளை அதில் சேர்த்து ருசிக்கலாம். இளநீர் அல்லது பழ, காய்கறி ஜூஸாக பருகலாம். எலுமிச்சை, புதினா, வெள்ளரி, பெர்ரி, துளசி போன்றவற்றை தண்ணீரில் சேர்த்து பருகலாம். அவற்றை தனியே வைப்பதற்கு வசதி கொண்ட 'இன்-பில்ட்' பாட்டில்களும் கிடைக்கின்றன.

9. வாடிக்கையாக்குங்கள்

தினமும் உணவிற்கு முன்பும், பின்பும், வேலைக்கு இடையேயும் தண்ணீர் பருகுவதை வாடிக்கையாக்கி விடுங்கள். இந்த பழக்கம் காலப்போக்கில் தண்ணீர் பருகும் வழக்கத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ளச் செய்துவிடும்.

10. உடற்பயிற்சியின்போது நீரேற்றத்துடன் இருங்கள்

உடற்பயிற்சி போன்ற உடல் இயக்க செயல்பாடுகளில் ஈடுபடுவது உடலில் தண்ணீரின் தேவையை அதிகரிக்க செய்துவிடும். வியர்வையின் மூலம் இழந்த திரவங்களை ஈடு செய்வதற்கு உடற்பயிற்சியின் முன்பும், பின்பும் தண்ணீர் பருகுவது அவசியமானது.

Tags:    

Similar News