பொது மருத்துவம்

மன நலம் காப்போம்...

Published On 2024-10-13 09:28 GMT   |   Update On 2024-10-13 09:28 GMT
  • ஒருவரின் அகத்தில் இருப்பது முகத்தில் இயல்பாகவே தெரியும்.
  • நமது துன்பமிகு சூழலில், மனது சரியில்லாத நேரத்தில் நமக்கு நம்பிக்கைக்குரியவர்களிடம் உரையாடலாம்.

ஒரு மனிதனுக்கு உடல் நலம் எப்படி முக்கியமோ அது போல மன நலமும் முக்கியமானது. இன்றைய அறிவியல் உலகில் ஓடிக்கொண்டு இருக்கிற மனித குலம் தங்கள் உடலையும் கவனிப்பதில்லை, உள்ளத்தையும் கவனிப்பதில்லை. உடல் நோயினால் ஏற்படும் வலிகளை கூட ஓரளவு மருந்து, மாத்திரைகள் எடுத்து வலியை தற்காலிகமாக பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் மன வலிகளை தற்காலிகமாக சரி செய்ய முடியாது. அதற்கு பல நாட்கள், பல சிகிச்சைகள் தேவைப்படும். அதற்கு பாதிக்கப்பட்டவர் ஒத்துழைப்பு கொடுப்பதே ஒரு கட்டத்தில் சவாலாகிவிடும்.

உடல் நோய்களுடன் கூட மனிதர்களால் ஓரளவு இயங்கிட முடியும். ஆனால் மன வலிகளோடு சரியாக செயல்பட முடியாது. எனவே அடிப்படையில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் மனநலத்தில் எப்பொழுதும் அக்கறை காட்ட வேண்டும். குடும்பத்தில் இருக்கும் ஒருவர் மற்றவருடைய மன நலத்தில் எப்போதும் கவனம் செலுத்திக் கொண்டே இருக்கவேண்டும். பெற்றோர் குழந்தைகளையும், குழந்தைகள் பெற்றோரையும் அக்கறையுடன் கவனிக்க வேண்டும்.

கவனித்தல் என்பது அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை பார்ப்பது மட்டும் அல்ல. அவர்கள் மனதளவில் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளவேண்டும். ஒருவரின் அகத்தில் இருப்பது முகத்தில் இயல்பாகவே தெரியும். அதை வைத்து மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? சோகமாக இருக்கிறார்களா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

சோகமாக இருப்பின் ஏன் சோகமாக இருக்கிறார்கள் என்று கேட்டு அவர்கள் மனதை வருத்திக்கொண்டிருக்கும் விஷயங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்களது உரையாடலில் குறுக்கீடு செய்யாமல் முழுமையாக பேச அனுமதித்தால் போதுமானது. அதுவே அவர்களுக்கு சிறந்த மருந்தாக அமையும். இவ்வாறு நமது துன்பமிகு சூழலில், மனது சரியில்லாத நேரத்தில் நமக்கு நம்பிக்கைக்குரியவர்களிடம் உரையாடலாம். நமக்கு பிடித்ததை உண்ணலாம். நமக்கு பிடித்த பாடல்களை கேட்கலாம். ஒரு சில சுற்றுலா இடங்களுக்கு செல்லலாம். இவ்வாறு செய்யும்போது நம் மன நலம் சீராக இருக்கும்.

Tags:    

Similar News