வேகமாக பரவி வரும் `மெட்ராஸ் ஐ' உஷார்...
- 'மெட்ராட்ஸ் ஐ' நோய் தொற்று அதிகளவில் பரவி வருகிறது.
- கண்களின் வெள்ளை படலம் சிவப்பு மற்றும் இளம் சிவப்பு நிறத்தில் மாறி விடும்.
கண்வெண்படல அழற்சி என்ற 'மெட்ராட்ஸ் ஐ' நோய் தொற்று அதிகளவில் பரவி வருகிறது. மெட்ராஸ் ஐ' பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்களில் எரிச்சல், நீர்வடிதல் என பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக கண்களின் வெள்ளை படலம் சிவப்பு மற்றும் இளம் சிவப்பு நிறத்தில் மாறி விடுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு படையெடுக்கின்றனர். நாளுக்கு நாள் கண்நோய் சிகிச்சை பிரிவுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
தினந்தோறும் 50-க்கும் மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். கடந்த 10 நாட்களில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் கண் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி கண் சிகிச்சை பிரிவு டாக்டர் ஒருவர் கூறுகையில், `மெட்ராட்ஸ் ஐ' வைரஸ் கிருமியால் பரவி வருகிறது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும். அதாவது, பாதிக்கப்பட்டவரின் கண்ணை பார்த்தால் மட்டும் பரவாது. அவர்கள் கண்களில் இருந்து வெளிவரும் கண்ணீரில் உள்ள வைரஸ் மூலம் மற்றவர்களுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்தும். வீட்டில் ஒருவருக்கு வந்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரவும் தன்மை கொண்டது.
இந்த நோயில் இருந்து தப்பிக்க கண் மற்றும் கைகளை சுத்தமாக வைத்துத் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய துணிகளை, பொருட்களை பயன்படுத்தக்கூடாது. குழந்தைகளுக்கு பாதிக்கப்பட்டால் அவர்களை பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.
`மெட்ராஸ் ஐ' பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மருத்துவமனையை அணுகி உரிய சிகிச்சை பெறலாம். 2 நாட்கள் சிகிச்சை பெற்றால் போதும் பூரண குணம் அடைய முடியும்' என்றார்.