பொது மருத்துவம்
null

கோடை காலத்தில் ஏற்படும் நீர்க்கடுப்பு பிரச்சினை

Published On 2024-04-23 07:06 GMT   |   Update On 2024-04-23 09:16 GMT
  • நீர்க்கடுப்பு மற்றும் சிறுநீரகக் கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.
  • சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது.

கோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் அல்லது 'நீர்க் கடுப்பு' மற்றும் சிறுநீரகக் கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமானால் ஏற்கனவே நம் உடலில் இருக்கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறுநீர் கழிக்கும் அளவு குறையும்.

கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச்சத்து ஆகாரங்களை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது எரிச்சல் வலி, கடுப்பு ஏற்படலாம்.

கோடைகாலங்களில் ரெயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ நெடுந்தூரப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த மாதிரியான நேரங்களில் நாம் நெடுநேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலம் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த மாதிரியான நேரங்களில் சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது. இது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் வருகிறது. பெரும்பாலும் 'ஈகோலை' என்னும் பாக்ட்டீரியாவால் இந்த 'நீர் கடுப்பு நோய்' வருகிறது.

அறிகுறிகள்:

அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதுபோன்ற உணர்வு வரும். அப்படி முயற்சி செய்யும்போது எரிச்சல் அல்லது கடுப்புடன் சிறுநீர் வெளியேறும். லேசாக அடிவயிற்றில் வலியும் ஏற்படும்.

குழந்தைகள் தன்னை அறியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். நோய் அதிகமாகும்போது சிலருக்கு பயங்கர குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்படும்.

கோடைகாலத்தில் நீர் சரியாக பருகாத காரணத்தால் சிறுநீர் வெளியேறும் அளவு குறைவாகும். இதனால் சிறுநீரகத்தில் செயல்பாட்டால் உப்பு கலந்த கழிவுப் பொருட்கள் முழுமையாக வெளியேறாமல் கொஞ்சம், கொஞ்சமாக படிந்து அது கல்லாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த பிரச்சினை வராமல் தடுப்பதற்கு சிறந்த வழி கோடை காலத்தில் தேவையான அளவு நீர்ச்சத்துள்ள பானங்களை குடிப்பதுதான்.

அப்பொழுதுதான் சிறுநீர் சரியான அளவில் வெளியேறி சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகளும், சிறுநீரில் உள்ள உப்புகளும் வெளியேற வாய்ப்புகள் ஏற்படும்.

மேலும் சுற்றுலா மற்றும் நெடுந்தூர பயணம் மேற்கொள்வோர் சிறுநீரை அடக்கி வைக்காமல் அவ்வப்போது கழிப்பது நல்லது.

உணவுமுறைகள்:

* இளநீர், மோர், பழச்சாறு மற்றும் நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை போதிய அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

* கர்ப்பிணிப் பெண்கள் மற்ற காலங்களை விட நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது.

* கோடை காலத்தில் வெயிலில் விளையாடச் சென்றுவிடும் குழந்தைகளை அழைத்து அடிக்கடி நிறைய நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை கொடுப்பதுடன் குழந்தைகளை அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் அறிவுறுத்த வேண்டும்.

* 'நீர்க் கடுப்பு' அதிகமானாலோ அல்லது அடிவயிற்றில் வலி அதிகமானாலோ மருத்துவரை அணுகி மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் எந்த வகை கிருமியால் இந்த 'நீர்க் கடுப்பு' நோய் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதை அழிப்பதற்கு தகுந்த மாத்திரைகளை உட்கொள்வது நல்லது.

மருந்துகள்:

ஹோமியோபதியில் ஆபிஸ் மெல், லைகோபோடியம், காந்தாரிஸ், பெர்பெரிஸ் வல்காரிஸ், ஹய்ட்ரஜ்யா போன்ற மருந்துகள் சிறுநீர் கடுப்பிற்கும், சிறுநீரகக் கற்கள் தோன்றுவதை தடுப்பதற்கும் மிகச் சிறந்தவை.

Tags:    

Similar News