கல்லீரலில் கொழுப்பு படிவதன் காரணம் என்ன?
- ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
- கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
கல்லீரலின் மொத்த் எடையில் 5 முதல் 10 சதவீதத்திற்கு மேல் கொழுப்பு குவிந்தால் கொழுப்பு நோய் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் அல்ட்ராசவுண்டு பரிசோதனை மூலம் தற்செயலாகவே நமக்கு தெரிய வரும்.
நீரிழிவு நோய், உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, உயர் ரத்த அழுத்தம் , ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் அளவு, மரபணு ஆகியவை கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்பட முக்கிய காரணம் ஆகும்.
நீரிழிவு நோயாளிகளில் மூன்றில் இரண்டு பேருக்கு இந்த கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பு உள்ளது. இதை ஆங்கிலத்தில் பேட்டி லிவர் அல்லது `ஹெபாடிக்ஸ்டீயடோஸிஸ்' என்று அழைக்கப்படுகிறது.
ஆரம்ப காலகட்டத்தில் இதனை பரிசோதனை செய்து கண்டறியத்தவறினால் இது ஸ்டீயட் ஹெபடைட்டிஸ் சிர்ஹோஸிஸ், கல்லீரல் செயலிழப்பு போன்ற உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்குடிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
கொழுப்பு கல்லீரல் நோய் பெரும்பாலும் அறிகுறிகளை வெளிப்படுத்தாவிட்டாலும் ஒரு சில நேரங்களில் சிலருக்கு குமட்டல் வாந்தி, உடல் சோர்வு, கால் வீக்கம், மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகள் ஏற்படும். மேலும் கல்லீரல் கொழுப்பு நோய் இன்சுலின் எதிர்மறை நிலையை உருவாக்குவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
கொழுப்பு கல்லீரல் நோய் வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் பின்பற்ற வேண்டியவை:
* அதிக சர்க்கரை உள்ள உணவுகள், குளிர்பானங்கள், சோடா, பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிகமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்ட பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அதிகமாக உண்ண வேண்டும்.
* தினமும் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும்.
* புகைப்பழக்கம் மற்றும் மதுபழக்கத்தை விட்டொழிக்க வேண்டும்.