வாழைப்பழம் சாப்பிட சரியான நேரம் எது?
- அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று வாழைப்பழம்.
- வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
காலை நேர சிற்றுண்டியாக இருந்தாலும் சரி, பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பியபோதும் சரி குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்றாக வாழைப்பழம் இருக்கிறது. பள்ளிக்கூடத்தில் இடைவேளை நேரத்தில் ருசிக்கப்படும் ஸ்நாக்ஸ்களிலும் வாழைப்பழத்தை பலரும் சேர்த்துக்கொள்கிறார்கள். குழந்தைகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் சாப்பிடும் பழமாக வாழைப்பழம் இருக்கிறது.
வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. செரிமானத்தை ஒழுங்குபடுத்தும். அதிலிருக்கும் பொட்டாசியம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் அவசியமானவை. அதன் நன்மைகளை கருத்தில் கொண்டு சிலர் காலை உணவில் வாழைப்பழத்தை சேர்த்துக்கொள்கிறார்கள்.
அன்றைய நாளில் மிக முக்கியமான உணவாகவும் கருதப்படுகிறது. இருப்பினும் எல்லா நேரத்திலும் சாப்பிடுவதற்கு சிறந்த தேர்வாக வாழைப்பழம் இருப்பதில்லை. அதில் இருக்கும் உயர் சர்க்கரைதான் அதற்கு காரணம்.
இது அமில வகை (அசிடிக் புரூட்) பழமாகும். இதனை சரியான வேளையில் உட்கொள்ளாவிட்டால் செரிமானத்தை சீர்குலைக்கும் அசிடிக் மூலக்கூறுகளை வெளியிடும். அது சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். மற்றொரு குறைபாடு, இதில் கார்போஹைட்ரேட் 25 சதவீதத்துக்கும் மேல் இருக்கிறது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுத்துவிடும்.
வாழைப்பழத்தை காலை உணவுடன் சாப்பிட விரும்பினால், அதனுடன் ஏதேனும் ஒரு உணவுப்பொருளை சேர்த்து சாப்பிடுமாறு உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். வாழைப்பழத்தை தனியாக சாப்பிட சிறந்த நேரம் எது தெரியுமா?
இதுகுறித்து மும்பையை சேர்ந்த இயற்கை மருத்துவர் சந்தோஷ் பாண்டே கூறுகையில், ''அன்றைய நாளின் எந்த நேரத்திலும் வாழைப்பழத்தை உட்கொள்ளலாம். இருப்பினும் உடலில் வளர்ச்சிதை மாற்றம் இரவு நேரத்தில் மிகவும் குறைவாக இருக்கும்.
அந்த சமயத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது தூக்க சுழற்சியை சீராக்கும். டிரிப்டோபன் என்னும் அமினோ அமிலம் உற்பத்திக்கு வழிவகுக்கும். இது உடலுக்கு இன்றியமையாதது. தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் செரோடோனின் உற்பத்திக்கு வழிவகுக்கும். எனவே இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது'' என்கிறார்.