இரவு பணிக்கு செல்பவரா நீங்கள்...உஷார்?
- மெனோபஸ் முன்கூட்டியே வருவதற்கு 9 சதவீதம் அதிகம் வாய்ப்பு.
- கருமுட்டை உற்பத்தி நின்றுவிடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
இரவு பணிக்கு செல்லும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காலம் முன்கூட்டியே முடிவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அத்துடன் இதயம் சார்ந்த நோய்கள், நினைவாற்றல் திறன் குறைபாடு, எலும்புகள் பலவீனமடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
20 மாதங்கள் தொடந்து இரவு நேர ஷிப்டுகளில் பணி புரியும் பெண்களிடம் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து அதன் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அப்படி 20 மாதங்கள் அல்லது இரண்டு ஆண்டுகள் இரவு நேரத்தில் பணி புரியும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் இறுதி நிலையான மெனோபஸ் முன்கூட்டியே வருவதற்கு 9 சதவீதம் அதிகம் வாய்ப்பிருக்கிறது.
அதுவே 20 ஆண்டுகளாக தொடர்ந்து இரவு பணியை மேற்கொள்பவர்களாக இருந்தால் 73 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
`45 வயதுக்கு முன்பாகவே மாதவிடாய் சுழற்சி முடிவடைந்த பெண்களாக இருந்தால் அவர்கள் ஷிப்ட் அடிப்படையில் பார்க்கும் வேலையை முக்கியமானதாக கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. வேலைக்காக தொடர்ந்து சுழற்சி முறையில் உடல் இயக்கம் நடைபெற்று கொண்டிருப்பது, மன அழுத்தம் போன்றவை அதற்கு காரணமாக இருக்கிறது. இதுபற்றி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்வது அவசியம்'' என்கிறார்,
ஆய்வை மேற்கொண்ட கனடாவில் உள்ள டல்கவுசி பல்கலைக்கழக பேராசிரியர், டேவிட் ஸ்டாக். இரவு நேரத்தில் வேலை செய்யும்போது ஏற்படும் மன அழுத்தம் ஈஸ்ரோஜெனின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தி அதனால் முன்கூட்டியே மாதவிடாய் காலம் முடிவடைவதற்கு வழிவகுத்துவிடுகிறது.
மேலும் கருமுட்டை உற்பத்தி நின்றுவிடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு 22 ஆண்டுகளாக இரவு நேர பணியில் ஈடுபட்டிருக்கும் 80 ஆயிரம் நர்சுகள் உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.