தாய்ப்பால் கொடுப்பதில் உள்ள நன்மைகள்...!
- மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு தாய்ப்பாலேயாகும்.
- மன வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம் ஆகும்.
மனித குலத்தில் குழந்தைகளுக்கு வழங்கக் கூடிய உணவுகளிலேயே மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு தாய்ப்பாலேயாகும்.
குழந்தைகளின் முழுமையான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம் ஆகும். தாய்ப்பால் புகட்டுவதால் அழகு குறையும் என்ற கருத்தில் பலரும் இப்பொழுதெல்லாம் தாய்ப்பால் புகட்டுவதை தவிர்க்கின்றனர். ஆனாலும் சர்வதேச அளவில் ஐந்து வயது குழந்தைகளில் ஒரு கோடி குழந்தைகள் வரையில் தாய்ப்பால் புகட்டப்படாமல், ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கின்றன. ஆகவே அனைவரும் தாய்ப்பாலின் நலன்களை அறிந்து, அதை பற்றிய விழிப்புணர்வு பெறுதல் அவசியமாகிறது.
பச்சிளம் குழந்தைக்கு தாய் பால் புகட்டுவதே சிறந்தது. அதற்கு அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மட்டும் காரணம் அல்ல, தாய்ப்பால் புகட்டுவதில் தாய்க்கும் நன்மை உண்டு. ஆறு மாதம் வரையில் குழந்தைக்கு தேவையான வைட்டமின் மற்றும் சத்துகளோடு, குழந்தையின் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் தாய்பாலிலேயே அதிகம் இருக்கிறது.
தாய்ப்பால் புகட்டுவது குழந்தை பேற்றின் போது ஏற்பட்ட இரத்த இழப்பை சரிசெய்து, அது சம்மந்தமான நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
தாய்ப்பால் புகட்டுவது தாய்மார்கள் கர்ப்பகாலத்தில் ஏற்பட்ட உடல் மாற்றங்களில் இருந்து மீள்வதற்கு உதவுகிறது மற்றும் குழந்தை பிறக்கும் போது ஏற்பட்ட வலியை மறந்து, குழந்தையை மகிழ்ச்சியாக கொஞ்சவும் வழி செய்கிறது.
தாய்ப்பால் புகட்டுவதால் தாய்க்கும், சேய்க்கும் உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாகவும் பிணைப்பு ஏற்படும். தாய்ப்பால் புகட்டுவது மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது.