பெண்கள் உலகம்

கர்ப்பகாலத்தில் 'மேக்கப்' போடுவதால் கருவுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Published On 2023-07-10 04:32 GMT   |   Update On 2023-07-10 04:32 GMT
  • சரும பராமரிப்புக்கு 'வைட்டமின் ஏ' அவசியமானது.
  • மேக்கப் பொருட்களில் முக்கியமானது காஜல்.

கர்ப்பகாலத்தில் சத்துள்ள உணவு மற்றும் பாதுகாப்பான உடைகளை கவனமாகத் தேர்ந்தெடுக்கும் கர்ப்பிணிகள், மேக்கப் போடுவதிலும் சற்றே எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். முக அழகை மேம்படுத்திக் காட்டுவதற்கு பலவிதமான மேக்கப் பொருட்களைப் பயன்படுத்தும்போது, அதில் உள்ள மூலப் பொருட்களைப் படித்து தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். சில பொருட்களில் உள்ள ரசாயனக் கலவைகள், வயிற்றில் இருக்கும் கருவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அது பற்றிய தகவல்களை இங்கே காணலாம்:

மேக்கப் பொருட்களில் இருக்கும் பாராபென்ஸ், சோடியம் லாரில் சல்பேட், பித்தலேட்ஸ் போன்ற ரசாயனக் கலவைகள் உடல்நலத்துக்கு ஆபத்தானதாகும். எனவே இத்தகைய மேக்கப் சாதனங்கள் பயன்படுத்துவதை கர்ப்ப காலம் முடியும் வரை தவிர்க்கலாம். செயற்கை நிறங்கள் மற்றும் சாலிசிலிக் அமிலம் கொண்ட மேக்கப் பொருட்களையும் தவிர்ப்பது நல்லது.

சரும பராமரிப்புக்கு 'வைட்டமின் ஏ' அவசியமானது. ஆனால் சில அழகு சாதனப் பொருட்களில் செயற்கை ரெட்டினாய்டுகள் எனப்படும் வைட்டமின் ஏ-வின் கலவை பயன்படுத்தப்படுகிறது. மேலும், சருமத்தை பொலிவாக்கும் கிரீம்களில் காணப்படும் 'வைட்டமின் கே' ரத்தத்தை உறைய வைப்பதற்கு பயன்படுகிறது. இவை கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இதுதவிர மேக்கப் பொருட்களில் கலக்கப்படும் காரீயம் மற்றும் பாதரசம் போன்ற பொருட்கள் கர்ப்பிணிகளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.

மேக்கப் பொருட்களும், பாதுகாப்பான பயன்பாடும்: லிப்ஸ்டிக் (உதட்டுச் சாயம்): கர்ப்பிணிகள் சாப்பிடும் போது அல்லது தண்ணீர் குடிக்கும் போது லிப்ஸ்டிக்கில் உள்ள ரசாயனக் கலவைகள் வயிற்றுக்குள்ளே சென்று பாதிப்பை ஏற்படுத்தலாம். இதற்கு மாறாக தேன், ரோஸ் எண்ணெய், பாதாம் எண்ணெய் முதலிய இயற்கை பொருட்களால் ஆன லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம்.

முக கிரீம்: முகத்துக்கு பூசும் கிரீம்களில் செயற்கையான பொருட்கள் அல்லது ரசாயனங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த, 'ஹைபோஅலர்ஜெனிக்', 'வாசனை இல்லாத', 'இயற்கையான' என்று குறிப்பிடப்பட்டிருக்கும் கிரீம்களை தேர்ந்தெடுக்கலாம்.

நெயில் பாலிஷ்: நகச் சாயத்தில் 'டோலுயீன்' எனும் ரசாயனக் கலவை பயன்படுத்தப்படுகிறது. இது சாப்பிடும்போது உடலுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலம் முடியும் வரை நகச் சாயத்தை முழுமையாக தவிர்த்து விடலாம்.

காஜல் (மை): மேக்கப் பொருட்களில் முக்கியமானது காஜல். 'கண் மை' பிடிக்காத பெண்களே இல்லை. இயற்கையான முறையில் கற்பூரம், ஆமணக்கு எண்ணெய் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 'கண் மை' உபயோகிப்பது நல்லது. இது கண்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது.

மேக்கப் இல்லாமலும் அழகாக இருக்கலாம்:

* கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றத்தால் முகத்தில் பருக்கள், தடிப்புகள் ஏற்பட்டாலும், கர்ப்பிணி பெண்களுக்கு உரித்தான பொலிவு, அவர்களுக்கு தனி அழகை ஏற்படுத்தும்.

* ஆரோக்கியமான உணவும், பழங்களும், பச்சை காய்கறிகளும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும், அழகும் இயற்கையாகவே மேம்படும்.

* கர்ப்ப காலத்தில் 100 சதவீதம் இயற்கையான மேக்கப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும்.

Tags:    

Similar News