சிசேரியன் பிரசவத்திற்கான காரணமும்... சுகப்பிரசவத்தின் நன்மைகளும்...
- சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
- சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்றெடுப்பது தாய்-சேய் இருவருக்கும் பாதுகாப்பானது.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்புபடி கடந்த ஐந்து ஆண்டுகளில் சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு விகிதம் 4.3 சதவீதம் அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவ மனைகளில் தான் சிசேரியன் பிரசவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
* பெண்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்வது, பணி நிமித்தம் காரணமாக குழந்தை பிறப்பை தள்ளிப்போடுவது, 35 வயதை எட்டிய பிறகு கருத்தரிப்பது போன்றவை சிசேரியன் பிரசவத்திற்கு காரணமாக அமைந்திருக்கின்றன.
* உடல் பருமனும் சிசேரியன் பிரசவத்திற்கு வழிவகுக்கிறது. பி.எம்.ஐ. அளவு 25-க்கு மேல் இருந்தால் பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அது சிசேரியன் பிரசவத்திற்கு காரணமாகிவிடும்.
* சில பெண்கள் பிரசவ வலிக்கு பயந்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்றெடுத்துக்கொள்வதற்கு விரும்புகிறார்கள்.
* பிரசவ அறையில் அதிக நேரம் செலவிடும் சூழலும் சிசேரியனை தேர்ந்தெடுக்க காரணமாகிவிடுகிறது. குழந்தை பிறப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட கால அளவை கடந்தும் பிரசவ வலி ஏற்படாதபோது, தாய்-சேய் இருவரது உடல் நலனை பாதுகாக்கும் பொருட்டு சிசேரியனை தேர்ந்தெடுக்க நேரிடுகிறது.
சுகப் பிரசவத்திற்கு வழிமுறைகள்
* சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்றெடுப்பது தாய்-சேய் இருவருக்கும் பாதுகாப்பானது. பிரசவம் தொடர்பான பல்வேறு சிக்கல்களையும், ஆபத்துக்களையும் குறைக்கும்.
* நீண்ட தூர ஓட்டப் பந்தயத்திற்கு தயாராகுவதற்கு உடலுக்கு போதுமான ஆற்றல் (ஸ்டெமினா) தேவைப்படும். பிரசவமும் அது போன்றதுதான். மாரத்தான் ஓட்டப்பந்தயத்திற்கு தயாராகுவதுபோல 10 மாத கர்ப்ப காலத்தையும் கருத வேண்டும். அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
* தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் இயற்கையாகவே சுக பிரசவம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனினும் மருத்துவரின் ஆலோசனை பெற்று உடல் நிலைக்கு ஏற்ற எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியமானது.
* 'ஸ்குவாட்' எனப்படும் குனிந்து நிமிரும் உடற்பயிற்சியை செய்வது பிரசவத்தை எளிதாக்கும். கால்களை நேர் நிலையில் வைத்துக்கொண்டு மூட்டுகளை நன்றாக மடக்கியபடி குனிந்து நிமிரும்போது இடுப்பு பகுதிகள் விரிவடையும். கருவில் இருக்கும் குழந்தை எளிதாக பிரசவ நிலைக்கு வருவதற்கு வழிவகுக்கும். இந்த பயிற்சியை மருத்துவ ஆலோசனை பெற்று உடற்பயிற்சியாளரின் அறிவுரையின்படி மேற்கொள்ள வேண்டும்.
* பிரசவ காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பயிற்றுவிக்கும் மையங்கள் இருக்கின்றன. அங்கு பயிற்சி பெறுவது பிரசவத்தை எளிதாக்கும்.
* கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது ஆரோக்கியமானது. உடலுக்கு போதுமான புரதம் மற்றும் ஆற்றலை வழங்கும் உணவுகளை உட்கொள்வதன் மூலம் கருப்பையை வலுவாக்க முடியும்.