பெண்களுக்கு வரும் மார்பக வலியும்... காரணமும்... இயற்கைத் தீர்வுகளும்...
- பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது மார்பக வலியினால் தான்.
- சித்த மருத்துவத்தில் இதற்கு நிரந்தர தீர்வு உண்டு.
மார்பகம் என்பது பெண்கள் பூப்பு அடைந்தபின் வளர்ச்சி அடையும் உறுப்பாக பலர் கருதுகின்றனர். உண்மையில் தாயின் கருவில் இருக்கும் போதே, ஆறாவது வாரம் முதல் எட்டாவது வாரத்தில் மார்பகத்தின் வளர்ச்சி உண்டாவதற்கான ஆயத்தம் உடலில் உண்டாகி விடுகிறது. அதன் பின் மார்பகம் சார்ந்த பல்வேறு பகுதிகள் ஒவ்வொன்றாக உண்டாக துவங்கி விடுகின்றன. இத்தகைய வளர்ச்சியில் ஹார்மோன்கள் முக்கிய பங்காற்றுகின்றன. பெண் ஹார்மோனாக கருதப்படும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டெரோன் மட்டுமல்லாது மூளையில் உள்ள பிட்யூட்டரி எனும் நாளமில்லா சுரப்பியில் சுரக்கும் புரோலாக்டின் எனும் ஹார்மோனும் முக்கிய பங்காற்றுகிறது. இந்த புரோலாக்டின் ஹார்மோன் தான் தாய்ப்பால் சுரப்பிற்கும் முதன்மையானது.
பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது மார்பக வலியினால் தான். கிட்டத்தட்ட 65% பெண்கள் மார்பக வலியால் அவதிப்படுவதாக அறிவியல் தரவுகள் கூறுகின்றன.
மாதவிடாய்க்கு முன்பாக இத்தகைய வலியுடனும் வேதனையுடனும் பல பெண்கள் துன்பப்படுகிறார்கள். இது 'சைக்ளிக் மாஸ்டால்ஜியா' என்று அழைக்கப்படும். இது மட்டுமில்லாது முதல் பூப்பினை எய்தும் போதும், கர்ப்ப காலத்திலும், கர்ப்பத்திற்கு பின் பாலூட்டும் காலத்திலும் கூட பல பெண்களுக்கு மார்பக வலி பல்வேறு உடல் செயலியல் மாற்றங்களால் உண்டாகிறது. இறுதி மாதவிடாய் என்று கருதப்படும் மெனோபாஸ் நிலைக்கு பின்னும் பல பெண்களுக்கு மார்பக வலி உண்டாகும். இது 'சைக்ளிக் அல்லாத மார்பக வலி' என்று கருதப்படும். இவற்றிற்கு சித்த மருத்துவம் தரும் தீர்வுகளையும், உணவு முறைகளையும் பின்பற்றுவது, வலியை குறைத்து நல்ல முன்னேற்றம் தரும்.
மார்பக வலியின் போது சித்த மருத்துவ கடைசரக்குகள் பயனுள்ளதாக உள்ளதை ஆய்வுத் தரவுகள் கூறுகின்றது. கருஞ்சீரகம், சோம்பு, இஞ்சி, மஞ்சள், ஆளி விதை ஆகியன அதில் முக்கிய இடத்தை பிடிக்கின்றன. கருஞ்சீரகத் தைலத்தை கொண்டு மேலை நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் சைக்ளிக் மார்புவலிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக முடிவுகள் கூறுகின்றன. மாதவிடாயின் போது உண்டாகும் வயிற்றுவலிக்கு சோம்பு கசாயம் (பெருஞ்சீரகம்) கைகண்ட மருந்து. அதைப்போல் மார்பக வலிக்கும் பயன் தருவதாக உள்ளது. ஒமேகா-3 எனும் மருத்துவ குணமிக்க கொழுப்பு அமிலத்தை இயற்கையில் கொண்டுள்ள சித்த மருத்துவ மூலிகை ஆளி விதை. பெண்களின் மார்பக வலியை குறைப்பதில் இதுவும் பயனளிக்கும்.
மஞ்சள் பெண்களின் மாதவிடாய் சமயத்தில் உண்டாகும் மார்பக வலிக்கும் சிறந்த பலன் தருவதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. காரணம் இதில் உள்ள குர்குமின் வேதிப்பொருள் உடலில் வலி மற்றும் வீக்கத்திற்கு காரணமாகும் ப்ரோஸ்டாகிலாண்டின் என்ற வேதிப்பொருளின் செயலை தடுப்பதாக உள்ளது.
இஞ்சியில் உள்ள 'ஜின்ஜிபேரின்' எனும் அல்கலாய்டு வேதிப்பொருள் உடலில் வீக்கம் மற்றும் வலியை உண்டாக்கும் ப்ரோஸ்டாகிலாண்டின் மற்றும் லியூகோட்ரின் ஆகியவற்றின் செயலை தடுத்து வலியை குறைக்கும் தன்மையுடையது. ஆக பெண்கள் ஒரு கோப்பை இஞ்சி டீ எடுத்துக்கொள்வது பெண்களின் மார்பக வலியை குறைக்கும் இயற்கை அலுப்பு மருந்தாக உள்ளது. இது சித்த மருத்துவத்தில் எளிமையே வலிமைக்கு உதாரணம்.
தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com