பெண்கள் உலகம்

வேலைக்குப் போவது பெண்களுக்கு மகிழ்ச்சியா? சோகமா?

Published On 2023-06-06 07:03 GMT   |   Update On 2023-06-06 07:03 GMT
  • வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
  • ஆண்களைப்போல் பெண்களும் இரவு ஷிப்ட்டில் பணியாற்றுகிறார்கள்.

வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் திருமணத்திற்கு முன்பு குடும்பப் பொறுப்புகளை சுமக்கவேண்டியதில்லை. அலுவலகப் பணிகளை பார்த்தால் போதுமானது. ஆனால் திருமணமாகிவிட்டால், குடும்ப நிர்வாகத்தையும் அவர்கள் சேர்த்து சுமக்க வேண்டியதிருக்கிறது. இந்த இரண்டு பணிகளையும் சேர்த்து கவனிக்கும் பெண்கள் உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அல்லது வருத்தத்தோடு இரண்டு பணிகளையும் செய்துகொண்டிருக்கிறார்களா? என்பதை எல்லாம் அலசும் வித்தியாசமான சர்வே இது!

* குடும்ப நிர்வாகம், அலுவலகப் பணி இரண்டையும் கவனிப்பது உங்களை எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது என்ற கேள்விக்கு..?

- 51.8 சதவீத பெண்கள் 'மகிழ்ச்சியடைந்து கொள்வதைவிட வேறு வழியில்லை' என்று சற்று சலிப்பு கலந்த நிலையில் பதில் கூறியிருக்கிறார்கள்.

- மகிழ்ச்சியாக இருக்கிறது என்ற பதில், 37.5 சதவீத பெண்களிடமிருந்து கிடைத்திருக்கிறது.

- கொஞ்சம்கூட மகிழ்ச்சியில்லை என்று 10.7 சதவீதம் பேர் கருத்துக் கூறியிருக்கிறார்கள்.

* நீங்கள் குடும்ப நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டு, வெளியே சென்று வேலையும் செய்ய என்ன காரணம் என்ற கேள்விக்கு..?

- ஊதியத்திற்காக என்று 55 சதவீதம் பேரும், வேலை தரும் ஆத்ம திருப்திக்காக என்று 40 சதவீதம் பேரும் கூறியுள்ளார்கள்.

- மீதமுள்ள பெண்கள் 'சமூகத்திலும், உறவினர்கள் மத்தியிலும் கிடைக்கும் கவுரவத்திற்காகவும்- வீட்டிலே இருந்தால் போரடித்துப்போவதை தவிர்க்கவும்' வேலைக்குப் போவதாக சொல்கிறார்கள்.

தனியார் அமைப்பு ஒன்று நடத்திய இந்த சர்வேயில் கருத்து தெரிவித்திருக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் 26 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் கணிசமான அளவினர், குடும்பம் மற்றும் வேலையால் அதிக மனஅழுத்தம் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். இரவில் தூங்கச் செல்லும்போது மறுநாள் காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருப்பது, காலை உணவு என்ன தயாரிப்பது, கியாசை அணைத்தோமா, வீட்டை பூட்டினோமா.. என்றெல்லாம் நூறு கேள்விகள் மூளையை மொய்த்துக்கொண்டிருக்கும் போதே தூங்கிப்போவதாகவும், திடுக்கிட்டு விழிக்கும்போது விடிந்துவிடுவதாகவும் அலுப்போடு சொல்கிறார்கள். ஒவ்வொரு நாளையும் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி தொடங்கி, ஒரே மாதிரி முடிப்பது எரிச்சலை தருவதாகவும் சொல்கிறார்கள்.

* வீட்டு நிர்வாகத்தைவிட அலுவலகப் பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா என்ற கேள்விக்கு..?

- 60.7 சதவீத பெண்கள், இரண்டையும் சமமாக பாவிப்பதாக சொல்கிறார்கள்.

- அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும்போது வீட்டை மறந்துவிடுவதாக 25 சதவீதம் பேர் பதிலளித்திருக் கிறார்கள்.

- 13 சதவீத பெண்கள், 'வீட்டில் இருந்து தேவையான அன்பு கிடைக்காதபோது, அலுவலக வேலையில் மூழ்கிவிடுவதாக' சொல்கிறார்கள்.

- மீதமுள்ளவர்கள் 'கணவரோடு சண்டையிட்டால் கவனம் முழுவதும் வேலையில் திரும்பி விடும்' என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

* அலுவலகத்தில் வேலை முடிந்து வீடு திரும்ப தாமதமானால், வீட்டில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு கிடைக்கும் என்ற கேள்விக்கு..?

- அமைதியாக வரவேற்று, அடுத்து செய்யவேண்டிய வீட்டு வேலைகள் அனைத்திலும் உதவுவார்கள் என்று 54.6 சதவீதம் பேர் சொல்லியிருக்கிறார்கள்.

- அரைகுறை மனதோடு வீட்டு வேலைகளில் உதவுவார்கள் என்று 30 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்திருக் கிறார்கள்.

- பத்து சதவீதம் பேர், வீட்டில் எடக்கு மடக்காக கேள்வி கேட்பார்கள் என்று தங்கள் வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

- மீதமுள்ளவர்கள், 'அன்று முழுவதும் வீட்டில் உள்ளவர்கள் இறுக்கமாக காணப்படுவார்கள்' என்று கூறியிருக் கிறார்கள்.

* உங்கள் வேலைச் சுமையை உணர்ந்து, கணவர் உங்களுக்கு உதவுவாரா என்ற கேள்விக்கு..?

- வேலைச் சுமையை உணர்ந்துகொள்வார். ஆனால் எப்போதாவதுதான் உதவுவார் என்பது 39.3 சதவீத பெண் களின் கருத்து.

- தாமாகவே முன்வந்து உதவுவார் என்று கூறி, 32.1 சதவீத பெண்கள் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள்.

- 20 சதவீதத்தினர், 'உதவி செய்வது என்பது அவரது அப்போதைய மனநிலையை பொறுத்தது' என்று கூறியிருக்கிறார்கள்.

- மீதமுள்ளவர்கள் என்ன கூறியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள். 'திரும்பிக்கூட பார்ப்பதில்லை' என்று சொல்லியிருக்கிறார்கள்.

பொதுவாக வேலைக்கு செல்லும் மனைவிக்கு வீட்டு வேலைகளில் தன்னால் முடிந்த அளவுக்கு உதவவேண்டும் என்றுதான் கணவர் விரும்புகிறார். 'இன்று வீட்டு வேலைகளை நீ செய். குழந்தைகளை நான் கவனித்துக்கொள்கிறேன்' என்று மனைவியிடம் சொல்லவும் செய்வார்கள். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் நடக்காது. கடைசியில் எல்லா வேலைகளும் சேர்ந்து வழக்கம்போல் மனைவி தலையில்தான் விழும். அதனால் இந்த விஷயத்தில் கணவர் கொடுக்கும் வாக்குறுதி காற்றில் பறந்துவிடுவதால், மனைவி மார்கள் பெரும்பாலும் அவர்களை நம்புவதில்லை.

அதே நேரத்தில் 'வேலை முடிந்து வீடு திரும்புவதில் தாமதம் ஏற்படுதல்' என்ற சிந்தாந்தம் மறைந்துகொண்டிருக்கிறது. ஏன்என்றால் முன்பெல்லாம் பெண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரைதான் என்ற நிலை இருந்தது. அதனால் அவர்கள் வேலைமுடிந்து, அடுத்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் வீடு திரும்பும் வாய்ப்பு இருந்தது. இன்றைய நிலை அதுவல்ல. ஆண்களைப்போல் பெண்களும் இரவு ஷிப்ட்டில் பணியாற்றுகிறார்கள். நள்ளிரவிலோ, அதிகாலையிலோ வீடு திரும்புகிறார்கள். அதனால் இரவு, நள்ளிரவு, தாமதம் என்பன போன்றவை எல்லாம், வேலைக்குப் போகும் பெண்களிடமிருந்து வழக்கொழிந்து கொண்டிருக்கின்றன.

* பஸ், ரெயிலில் பயணம் செய்து வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகள் என்னென்ன என்ற கேள்விக்கு..?

- 61 சதவீதம் பேர், சரியான நேரத்தில் அலுவலகத்திற்கு செல்ல முடிவதில்லை என்றும், அதுபோல் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீடு திரும்ப முடியவில்லை என்றும் கூறியிருக் கிறார்கள்.

- 27 சதவீதம் பேர், பயணத்திலே அதிக நேரத்தை செலவிடுவதால் ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுவதாக சொல்கிறார்கள்.

- 12 சதவீத பெண்கள் பாலியல்ரீதியான தொந்தரவுகள் பயணத்தில் உருவாகுவதாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

Tags:    

Similar News