தி.மு.க.வுக்கும் தினகரனுக்கும் ரகசிய உடன்பாடு: வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி
தஞ்சாவூர்:
தஞ்சை காவேரி கூட்டுறவு சிறப்பங்காடியில் குடும்பஅட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் பரிசுப்பொருட்களை வழங்கினர். இதில் அமைச்சர் துரைக்கண்ணு பேசும் போது கூறியதாவது:-
முதல்-அமைச்சரும், போக்குவரத்து துறை அமைச்சரும் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பஸ்களை அதிகமாக இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் 240 பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் வைத்திலிங்கம் எம்.பி. பேசும் போது கூறியதாவது:-
ஆர்.கே.நகரில் ஏற்கனவே நடந்த தேர்தலில் தி.மு.க 57 ஆயிரம் வாக்குகள் பெற்றது. ஆனால் தற்போது நடந்த தேர்தலில் 24 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. இதன்மூலம் தினகரனுக்கும் தி.மு.க.வுக்கும் ரகசிய உடன்பாடு இருப்பது உறுதியாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.