செய்திகள்

கலைஞராக சித்தரித்து பேனர்- தி.மு.க. தொண்டர்களுக்கு உதயநிதி கண்டிப்பு

Published On 2018-05-15 05:08 GMT   |   Update On 2018-05-15 05:08 GMT
கலைஞராக சித்தரித்து பேனர் வைக்கப்பட்டதற்கு தி.மு.க. தொண்டர்களை அழைத்து கண்டித்ததாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். #DMK #MKStalin #UdhayanidhiStalin
சென்னை:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், நடிகர், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:-

‘நான் எப்போதுமே அரசியலில் இருந்து வருகிறேன். என் தாத்தாவுக்காகவும் அப்பாவுக்காகவும் தேர்தல்களில் பிரசாரம் செய்துள்ளேன். நான் சினிமாவில் இருந்துவிட்டு அரசியலுக்குள் நுழைவதுதான் விமர்சனங்களுக்கு எல்லாம் காரணம்.

ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்த நான் அரசியலுக்கு வருவதை எப்படி தவறு எனலாம்? வேறு கட்சியில் இணைந்திருந்தால் இந்த பேச்சு வந்திருக்காதோ? எனது கட்சியில் நான் ஏதும் பதவி கேட்டேனா? இல்லை தேர்தலில் நிற்க சீட் கேட்டேனா? நான் மிக குறுகிய காலத்திலேயே மக்கள் கவனம் பெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் தான் விமர்சனம் செய்கிறார்கள்.’

கேள்வி:- தாத்தாவும், அப்பாவும் உங்களுக்கு பலமா?

பதில்:- இல்லை. எனக்கு பலவீனம் தான். ஒருவர் ஒரு கட்சியில் இருந்து கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டால் அவருக்கு பாராட்டுகள் தான் கிடைக்கும். ஆனால் என் வி‌ஷயத்தில் அப்படி இல்லாமல் விமர்சனங்கள் தான் வருகின்றன. காரணம் நான் இந்த குடும்பத்தில் பிறந்தது தான்.’

கே:- தி.மு.க. என்றாலே வாரிசு அரசியல்தானா?


ப:- அப்பா வி‌ஷயத்திலேயே இதற்கு பதில் இருக்கிறது. அப்பா வாரிசு என்பதால் பதவிக்கு வந்திருந்தால் எப்போதோ தலைவராகி இருக்க வேண்டும். ஆனால் அவர் தனது கடின உழைப்பால் மெதுவாக முன்னேறி இருக்கிறார். தலைவரின் மகன் என்பதால் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. பொறுமையும் கடின உழைப்பும்தான் அப்பாவின் தகுதிகள். அந்த தகுதிகள் அவருக்கு பதவியை தந்தது.

கே:- உங்களை கலைஞராக சித்தரிக்கும் பேனர்கள் தான் விமர்சனங்களுக்கு உள்ளாகிறது?

ப:- சில ஆர்வமிகுதி தொண்டர்கள் செய்யும் தவறான வேலை அது. அவர்களை அழைத்து நான் கடுமையாக கண்டித்ததோடு அந்த போஸ்டர்களை நீக்கும்வரை நான் வரமாட்டேன் என்று சொல்லி நீக்க வைக்கிறேன். தாத்தா, அப்பாவுடன் ஒப்பிடும் அளவுக்கு எனக்கு தகுதி இல்லை என்பது எனக்கு நன்றாக தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #UdhayanidhiStalin
Tags:    

Similar News