அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் vs கமலா.. அலறவிடும் கருத்துக்கணிப்புகள் - வெல்லப் போவது யார்?
- சொற்ப சதவீதமே இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் உள்ளது.
- நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் வெளியானது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று [நவம்பர் 5] நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் நிற்கும் கமலா ஹாரிஸ் [60 வயது] மற்றும் குடியரசு கட்சி சார்பில் நிற்கும் டொனல்டு டிரம்ப் [78 வயது] ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
கருத்துக்கணிப்புகள்
இழுபறி ஏற்படாமல் இருந்தால் வாக்குகள் உடனுக்குடன் எண்ணப்பட்ட உடனேயே அடுத்த அதிபர் யார் என தெரிந்துவிடும். தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே கருத்துக்கணிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சொற்ப சதவீதமே இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் என்று கணிக்கப்பட்டுள்ளதால் இழுபறி ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அட்லஸ் இன்டெல் போல்
குறிப்பாக முந்தைய கருத்துக்கணிப்புகளை போலல்லாது அட்லஸ் இன்டெல் போல் நிறுவனம் சார்பில் கடந்த நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் டிரம்ப் 49 சதவீத ஆதரவுடன் முன்னிலை பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 47.2 சதவீத ஆதரவு பெற்றுள்ளார். எனவே இருவருக்கும் இடையே 1.8 சதவீத வித்தியாசம் மட்டுமே உள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின்படி அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய 7 மாகாணங்களில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.
அரிசோனாவில் டிரம்புக்கு அதிகப்படியாக 51.9 சதவீதம் ஆதரவும், கமலா ஹாரிசுக்கு 45.1 சதவீத ஆதரவுவும் கிடைத்துள்ளது. நெவாடாவில் டிரம்ப் 51.4 சதவீதமும், கமலா ஹாரிஸ்க்கு 45.9 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது. வட கரோலினாவில் டிரம்ப் 50.4 சதவீதமும் கமலா ஹாரிசுக்கு 46.8 சதவீதமும் ஆதரவு உள்ளது.
ராய்ட்டர்ஸ் / இப்சோஸ்
முன்னதாக கடந்த ஜூலை மாதம் முதல் ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் வெளியிட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் கமலா ஹாரிஸ் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
கடந்த வாரம் அக்டோபர் 29 ஆம் தேதி ராய்ட்டர்ஸ் / இப்சோஸ் கடைசியாக வெளியிட்ட கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் 1 சதவீத வித்தியாசத்தில் டிரம்பை விட முன்னிலையில் உள்ளார். இந்த கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் 44 சதவீத ஆதரவும், டிரம்ப் 43 சதவீத ஆதரவும் உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் முந்தைய கருத்துக் கணிப்புகளில் இருந்ததைவிட கமலா ஹாரிசின் ஆதரவு சற்றே குறைந்துள்ளதையும் பார்க்க வேண்டி உள்ளது.
நியூயார்க் டைம்ஸ்
நியூயார்க் டைம்ஸ் மற்றும் சியனா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில், நெவாடா, வட கரோலினா, விஸ்கான்சின் ஆகிய மாநிலங்களில் கமலா ஹாரிஸ் சற்று முன்னிலையில் உள்ளதாக தெரியவருகிறது. அரிசோனாவில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.
7 கோடி பேர்
50 மாகாணங்களில் மொத்தம் 18.65 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் அவர்களில் 7 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிக்கும் முறைப்படி தங்களது வாக்குகளை செலுத்தி விட்டனர். அதன்படி 7 மாநிலங்களிலும் சுமார் 40 சதவீத வாக்காளர்கள் ஏற்கனவே வாக்களித்துவிட்டனர்.
அவர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் 8 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். அதேசமயம் டிரம்ப்க்கு வாக்களிக்பவர்கள் அதிகம் பேர் இன்றைய தினம் நடக்கும் நேரடி வாக்குப்பதிவிலேயே தங்களது வாக்குகளை செலுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.
இருவருக்கும் இடை சொற்ப சதவீதங்களே வாக்கு வித்தியாசம் உள்ளதால் கடைசி நேரத்தில் நிலைமை யாருக்கு சாதகமாக அமையும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.