செய்திகள்
ஒரே மாதத்தில் ஏழு லட்சம் யூனிட் விற்பனை - தொடர்ந்து அசத்தும் ஹீரோ மோட்டோகார்ப்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஏழு லட்சம் யூனிட் விற்பனையை பதிவு செய்திருக்கிறது. #motorcycle
இந்தியாவின் முன்னணி இருக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் தொடர்ந்து இரண்டாவது முறையாக மாதம் ஏழு லட்சம் யூனிட் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்திருக்கிறது. அக்டோபர் மாதத்தில் மட்டும் ஹூரோ மோட்டோகார்ப் 7,34,667 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது.
இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் விற்பனையானதை விட 16.4 சதவிகிதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 6,31,105 யூனிட்கள் விற்பனை செய்திருக்கிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2018-19ம் நிதியாண்டில் மட்டும் நான்காவது முறையாக ஏழு லட்சம் யூனிட் விற்பனை செய்திருக்கிறது.
முன்னதாக செப்டம்பர் 2018ல் ஹீரோ நிறுவன வரலாற்றிலேயே அதிகபட்சமாக 7,69,138 யூனிட்களை விற்பனை செய்தது. ஹூரோவிற்கு போட்டியாக ஹோன்டா நிறுவனம் சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்தது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 12 சதவிகிதம் அதிகம் ஆகும்.
சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டெஸ்டினி 125 ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டர் விலை ரூ.54,650 மற்றும் ரூ.57,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் துவங்கி இருக்கும் நிலையில், இதன் விநியோகம் இம்மாத இறுதியிலோ அல்லது டிசம்பர் மாத துவக்கத்தில் துவங்கலாம்.