உள்ளூர் செய்திகள் (District)

கஞ்சா வியாபாரிகளிடமிருந்து 12 மோட்டார் சைக்கிள், 35 செல்போன்கள், ஆட்டோக்கள் பறிமுதல்

Published On 2023-11-08 08:04 GMT   |   Update On 2023-11-08 08:04 GMT
  • கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன.
  • போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து வீட்டில் ஏதேனும் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை நடத்தினர்.

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை தாராளமாக நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வரப்பட்டு தேனி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படுவதுடன் அண்டை மாநிலமான கேரளாவுக்கும் கடத்திச்செல்லப்படுகிறது.

இதனைதடுக்க மாவட்ட எஸ்.பி பிரவீன்உமேஷ் டோங்கரே தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா வியாபாரிகளிடமிருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அவர்களின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு எஸ்.பி தனிப்படை போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ஆண்டிபட்டி சப்-இன்ஸ்பெக்டர் சவரியம்மாள்தேவி தலைமையிலான போலீசார் மறவபட்டி செல்லும் மெயின்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது மணியகாரன்பட்டி கிழக்குதெருவை சேர்ந்த முருகன்(54), அதே ஊரை சேர்ந்த செல்லபாண்டி(35), அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் ஒரு ஆட்டோவில் ஆந்திராவில் இருந்து வாங்கி வந்த 4.200 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கடத்திச்செல்ல முயன்றது தெரியவந்தது. போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து வீட்டில் ஏதேனும் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டிற்குள் 12 மோட்டார் சைக்கிள்கள், 2 ஆட்டோக்கள், 31 ஆன்ட்ராய்டு செல்போன்கள், 2 சாதா வகை செல்போன்கள், 2 டேப்லட் செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கஞ்சா விற்பனையில் வைத்திருந்த ரூ.42 ஆயிரம் பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

இந்த வாகனங்களை கஞ்சா வியாபாரிகள் அடகில் வாங்கி வைத்திருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் இந்த வாகனங்கள் அனைத்தும் கஞ்சா விற்பனைக்காக பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் ஒரு லாரியில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

கைதான 3 பேரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் தயார் படுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News