தூத்துக்குடி மாநகராட்சியில் 1200 மரக்கன்றுகள் நடும் விழா - கனிமொழி எம்.பி.தொடங்கி வைத்தார்
- தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் நடும் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி:
முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் உத்தரவின் பேரில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி 3-ம் மைல் பாலத்தின் கீழ் சங்கர் காலனியில் 1200 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி மாநகநகர தூய்மையில் மக்களின் பங்களிப்பு, என் குப்பை என் பொறுப்பு என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கனிமொழி எம்.பி.வாசித்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என் நகரம் என் பெருமை. என் நகரத்தை தூய்மையாகவும், சுத்தமாக வைப்பது என் கடமையும், பொறுப்பும் ஆகும். பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பதே நகர தூய்மைக்கான முதற்காரணம் என்பதை நான் நம்புகிறேன். தூய்மை பணிகளுக்கு என்னை அர்ப்பணித்துக் கொள்ள என் நேரத்தை ஒதுக்குவேன். நான் பொது இடங்களில் குப்பை கொட்ட மாட்டேன்.
பிறரையும் குப்பை கொட்ட அனுமதிக்க மாட்டேன். குப்பையை வீட்டிலேயே பிரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைப்பேன். தூய்மை நகருக்கான என் முயற்சியும், நான் பங்கேற்புடன் என் குடும்பத்தாரையும், சுற்றத் தாரையும் முழு ஆர்வத்துடன் பங்கேற்க ஊக்குவிப்பேன். என்னால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் என் நகரத்தைத் தூய்மையாக வைக்க பேருதவி செய்யும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்ற உறுதிமொழி வாக்கி யங்களை அவர் வாசிக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் வாசித்து தூய்மை உறுதி மொழியை ஏற்றனர்.
நிகழ்ச்சியில் மரக்கன்று கள் நடும் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி கோட்டுராஜா, கலைச்செல்வி திலகராஜ், மாநகர கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், கனகராஜ், கீதாமுருகேசன், இசக்கி ராஜா, சரவணா குமார், பவானி, கண்ணன், ராமர் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ஹரிகணேஷ், ராஜபாண்டி, ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர், மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், இயற்கை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.