நெல்லை மாவட்டத்தில் 13.65 லட்சம் வாக்காளர்கள் - கலெக்டர் விஷ்ணு பட்டியலை வெளியிட்டார்
- நவம்பர் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டார்.
- 5 சட்டமன்ற தொகுதியில் இறுதி வாக்காளர் பட்டியல் படி 13 லட்சத்து 65 ஆயிரத்து 632 வாக்காளர்கள் உள்ளனர்.
நெல்லை:
1.1.2023- ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறையில் திருத்தம் செய்வதற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதற்கு வசதியாக கடந்த நவம்பர் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டார்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
தொடர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த டிசம்பர் 8-ந் தேதி முடிவடைந்தன. இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு இறுதி பட்டியலை வெளியிட மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பெண்கள் அதிகம்
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளை, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 5 சட்டமன்ற தொகுதியில் இறுதி வாக்காளர் பட்டியல் படி 13 லட்சத்து 65 ஆயிரத்து 632 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் ஆண் வாக்காளர் கள் 6 லட்சத்து 68 ஆயிரத்து 47 பேரும் , பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 97 ஆயிரத்து 451 பேரும், இதர பாலினத்தவர்கள் 134 பேரும் உள்ளனர். அதிகபட்சமாக நெல்லை சட்டமன்ற தொகுதியில் 5097 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடிகள்
ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 5220 வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. வாக்குசாவடியை பொறுத்தவரை நாங்குநேரியில் புதிதாக ஒரு வாக்கு சாவடி அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 1484 வாக்குசாவடிகள் உள்ளது.
இந்த வாக்காளர் பட்டியல் தாசில்தார் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், வாக்குசாவடி அமைவிடங்கள், ஊராட்சி மன்றங்கள், மாநகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர்கள் தங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய அந்த பட்டியலை பார்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், தி.மு.க. வக்கீல் அணி செல்வ சூடாமணி, அ.தி.மு.க. பகுதி செயலாளர் சிந்து முருகன், காங்கிரஸ் சொக்கலிங்க குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.