கோவையில் விநாயகர் சிலைகளை கரைக்க 16 இடங்கள் தேர்வு
- விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (18-ந் தேதி) கொண்டாடப்படுகிறது.
- விநாயகர் சிலைகளை மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விசர்ஜனம் செய்ய வேண்டும்.
கோவை,
விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (18-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை கரைக்க 16 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவையில் விநாயகர் சிலைகளை வைக்க உரிய அதிகாரிகளிடம் முன்அனுமதி பெறவேண்டும். அதன்பிறகு தான் சம்பந்தப்பட்ட இடங்களில் சிலைகளை வைக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை கொண்டு உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக, கோவையில் 16 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி முத்தண்ணன்குளம், பவானி ஆறு (சிறுமுகை, எலகம்பாளையம், மேட்டுப்பாளையம் சுப்ரமணியர் கோவில் மற்றும் தேக்கம்பட்டி), அம்பராம்பாளையம் ஆறு, நொய்யல் ஆறு, உப்பாறு, நடுமலை ஆறு, ஆனைமலை முக்கோணம் ஆறு, சிறுமுகை பழத்தோட்டம், சாடிவயல், வாளையார் அணை, ஆழியாறு ஆத்துப்பாறை, குறிச்சிகுளம், குனியமுத்தூர் குளம், சிங்காநல்லூர் குளத்தேரி, வெள்ளக்கிணறு குளம் மற்றும் நாகராஜபுரம் குளம் ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகளை மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விசர்ஜனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.